வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உத்யோக் மன்தன்: இந்திய தொழில் துறையில் தரம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வலைதள கருத்தரங்கங்கள் நாளை துவக்கம்

Posted On: 03 JAN 2021 12:45PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்  மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (டிபிஐஐடி), இந்திய தரக் கவுன்சில், தேசிய உற்பத்தித் திறன் குழு, இந்திய தர நிர்ணய அமைப்பு மற்றும் தொழில் சபைகளுடன் இணைந்து, இந்திய தொழில் துறையில் தரம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் துறை சார்ந்த வலைதள கருத்தரங்கங்களை நடத்தவிருக்கின்றது. உத்யோக் மன்தன் என்ற பெயரிலான இந்த மாரதான் இணைய கருத்தரங்கங்கள், நாளை (ஜனவரி 4) முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும். ஜனவரி 6-ஆம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்பாளர்களுடன் உரையாடுவார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் ஒவ்வொரு கருத்தரங்கங்களிலும் துறை சார்ந்த மற்றும் தொழில் வல்லுநர்களின் விவாதங்கள் நடைபெறும். இந்த கருத்தரங்கங்களை விருப்பமுள்ளவர்கள் யூடியூப்-இல் நேரலையாகக் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனஉள்ளூர் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகிய முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த கருத்தரங்கங்களில் தரம் மற்றும் உற்பத்தி சார்ந்த சவால்களும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

உயர்ந்த தரம், சிறந்த உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் நாட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்திய தொழில்துறையினர் தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் திரு பியூஷ் கோயல் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685774

-----


(Release ID: 1685802) Visitor Counter : 123