நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து பணியாற்றுகிறது

Posted On: 01 JAN 2021 3:17PM by PIB Chennai

நுகர்வோர் நலன்களையும், உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஜுலை 20, 2020-இல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் 10-வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உருவாக்கப்பட்டு 24 ஜுலை 2020 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது வெளியான சில விளம்பரங்கள் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாக இருந்ததால், தண்ணீர் சுத்திகரிப்பான், பெயிண்ட், தரை துடைப்பான், ஜவுளி, கிருமி நாசினி, வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தானாக முன் வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம், வணிக நோக்கங்களுக்காக நுகர்வோரின் உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு தடுக்கப்படும்.

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், அவற்றிச் செயல்படுத்தவும் வேண்டும் என்பது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் நோக்கமாகும்நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் போது அது குறித்துப் புலனாய்வு மேற்கொள்ள இந்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புகார்கள் / விசாரணைகளைத் தொடங்குதல், பாதுகாப்பற்ற சரக்குகள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெற ஆணையிடுதல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றை நிறுத்த ஆணையிடுதல், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தயாரித்தவர்கள், சான்றுரைத்தவர்கள், வெளியிட்டவர்களுக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றையும் ஆணையம் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685356

                                                                       -----


(Release ID: 1685429) Visitor Counter : 260