எஃகுத்துறை அமைச்சகம்

ஆண்டு இறுதி அறிக்கை 2020 - எஃகுத் துறை அமைச்சகம்

Posted On: 31 DEC 2020 3:32PM by PIB Chennai

எஃகுத் துறை அமைச்சகத்தின் 2020ஆம் ஆண்டு முக்கிய சாதனைகள்:

* இந்திய எஃகு ஆணைய நிறுவனம் (செயில்) ஒடிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து 2 மில்லியன் டன் இரும்புத் தாதுகளை ஏலம் விடும் நடவடிக்கையை 2020-இல் தொடங்கியது. இது நாட்டில் இரும்புத்தாது கிடைக்கும் சூழலை மேம்படுத்தியது.

* எஃகுவை இந்தியா ஏற்றுமதி செய்தாலும், அதிகத் திறன் வாய்ந்த சிறப்பு எஃகு உற்பத்தி இங்கு இல்லாததால், அவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.  சிறப்பு எஃகு உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு உற்பத்தியுடன் தொடர்பான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த நவம்பர் 11ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளில் சிறப்பு எஃகு உற்பத்தியை ஆண்டுக்கு 37 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். மேலும், ரூ.35,000 கோடி முதலீட்டை ஈர்க்கும்.  இது நாட்டின் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கு தனது பங்களிப்பை அளிப்பதோடு மட்டும் அல்லாமல், எஃகுத் துறையில் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

* நாட்டில் தரமான எஃகு கிடைப்பதற்காக எஃகுத் தரக்கட்டுப்பாடு உத்தரவையும், மத்திய எஃகுத் துறை அமைச்சகம் பிறப்பித்தது. இதன் மூலம் தரம் குறைவான எஃகுத் தயாரிப்புகளுக்கு, இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.  இதன் மூலம் நாட்டின் தரமான எஃகு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

* எஃகுத் தொழில் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா - ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 22ஆம் தேதி கையெழுத்தானது. இது இரு நாடுகள் இடையே எஃகுத் துறையில், வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு, அனுபவம் பகிர்வு, எஃகுப் பயன்பாட்டில் சிறந்த முறைகள், பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

* எஃகுத் துறையில் முதலீடுகளைக் கவர, திட்ட மேம்பாட்டுப் பிரிவை எஃகு அமைச்சகம் உருவாக்கியது. முதலீட்டாளர்களை அடையாளம் காணுதல், எஃகுத் துறையில் முதலீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இப்பிரிவு மேற்கொள்கிறது. இப்பிரிவின் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன.

* எஃகுத் துறையில் தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்க, உள்நாட்டு இருப்பு மற்றும் எஃகுத் தயாரிப்புக் கொள்கையில் திருத்தங்களை எஃகு அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. இதன் மூலம் ரூ.ஐந்து இலட்சத்துக்கும் மேலான திட்டங்களுக்கு உள்நாட்டில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்.  இந்தக் கொள்கை மூலம் ரூ.21,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு எஃகு உள்நாட்டில் கொள்முதல் செய்ய வழி வகுத்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதோடு, வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்.

* எஃகுப் பொதுத்துறை நிறுவனங்களின் மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சை மையங்களாகவும் செயல்பட்டன. கோவிட் நோயாளிகளுக்கு 4,310 படுக்கை வசதிகள், 100 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், தனிமை மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. புலம் பெயர் தொழிலாளர்கள் 95,000 பேருக்கு, முடக்கக் காலத்தில் உணவளிக்கப்பட்டது. முகக்கவசங்கள் மற்றும் இதர உபகரணங்களும் வழங்கப்பட்டன.

* எஃகுப் பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் ஆக்ஸிஜன் ஆலைகளில் இருந்து, கோவிட் மருத்துவமனைகளுக்கு நாள் ஒன்றுக்கு 1200 முதல் 1500 டன் திரவ ஆக்ஸிஜன்களை வழங்கி உள்ளன.

* பிரதமரின் நல நிதிக்கு, எஃகுப் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.267.55 கோடி நிதி அளித்தன. மேலும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ.13.50 கோடியும் பிரதமரின் நல நிதிக்கு அளிக்கப்பட்டது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685071

**********************


(Release ID: 1685203) Visitor Counter : 220