குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்: ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் - 2020

Posted On: 31 DEC 2020 2:53PM by PIB Chennai

பல்வேறு முக்கியமான முன்னோடி நடவடிக்கைகளை மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு எடுத்தது.

நிதி ஆதரவு செயல்முறை, குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான வரைமுறையை விரிவாக்குதல், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாம்பியன்ஸ் தளம், காதி மற்றும் கிராமியத் தொழில்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் 2020-ஆம் வருடத்தில் எடுக்கப்பட்டன.

இந்திய அரசின் ரூ.4000 கோடி நிதி உதவியோடு, அழுத்தத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக ரூ.20,000 கோடி துணைக்கடன் திட்டம் 2020 ஜூன் 24 அன்று தொடங்கப்பட்டது.

இந்த வருடம் நவம்பர் 2020 வரை, ரூ.12.49 கோடி மதிப்பிலான உத்தரவாதம் 121 கடன்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதிகளின் நிதித்திட்டத்திற்கு ரூ.10,000 கோடி வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் 2020 ஆகஸ்ட் 5 அன்று வெளியிடப்பட்டன. இதன் மூலம் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி பங்கு முதலீடு கிடைக்கும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் 2020 செப்டம்பர் 30 வரை 53 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக 6.25 இலட்சம் குறு தொழில்முனைவோருக்கு ரூ. 14,500 கோடி மானியம் அளிக்கப்பட்டது.

2020 ஜனவரி முதல் நவம்பர் 30 வரை மட்டும், 60,211 குறு தொழில் முனைவோருக்கு ரூ.1,743.84 கோடி மானியம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 4.81 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஜனவரி 2020 முதல் அக்டோபர் வரை, 13 விரிவாக்க மையங்கள் பயிற்சி நடவடிக்கைகளைத் தொடங்கி, 10,240 பேருக்குப் பயிற்சி அளித்துள்ளன. 2019-20 நிதி ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 22 விரிவாக்க மையங்களில், தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள மையமும் ஒன்று. இங்கு பயிற்சிகள் தொடங்கிவிட்டன.

அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது வருடாந்திரப் பொருள் மற்றும் சேவைத் தேவைகளில் 25 சதவீதத்தை சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

அரசு மின் வணிகத் தளத்தில் 2020 டிசம்பர் 03 அன்றைய நிலவரப்படி 3,47,497 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளன. காதி மற்றும் கிராமத்தொழில்களை ஊக்குவிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685057

**********************



(Release ID: 1685179) Visitor Counter : 204