உள்துறை அமைச்சகம்

மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 27 DEC 2020 6:07PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். இம்பாலில் மின்னணு அலுவலகம் மற்றும் தௌபால் அணைத் திட்டத்தை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்தார். சுராசந்த்புர் மருத்துவக்கல்லூரி, மந்த்ரிபுக்ரியில் தொழில்நுட்ப - சிறப்புப் பொருளாதார மண்டலம், புதுதில்லியின் துவாரகாவில் மணிப்பூர் பவன், இம்பாலில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் உள்ளிட்ட ஏழு வளர்ச்சித் திட்டங்களுக்கு திரு. அமித் ஷா அடிக்கல் நாட்டினார். வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கான அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், மணிப்பூர் முதல்வர் திரு. என். பிரேன் சிங், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. அமித் ஷா, மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்ப - சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் ஒரே நாளில் துவங்கப்படுவதன் மூலம் வடகிழக்கு மாகாண வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக இவை அமைகிறது என்று குறிப்பிட்டார். தொழில்நுட்ப - சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவான பிறகு மணிப்பூரின் மொத்த வளர்ச்சி ஆண்டுக்கு ரூ.4,600 கோடி அதிகரிக்கும் என்றும், சுமார் 44,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப - சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மணிப்பூரின் இளைஞர்களை உலக அளவில் இணைக்கும் பாலமாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

திரு. நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வரின் தலைமையில் முழு அடைப்புகள் இல்லாத, வளர்ச்சிப் பாதையை நோக்கி மணிப்பூர் சென்று கொண்டிருப்பதாக திரு. அமித் ஷா தெரிவித்தார். வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியில் திரு. மோடி உறுதியாக இருப்பதாகவும், இந்தப் பகுதியின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

தௌபால் திட்டம் குறித்து பேசிய அமைச்சர், கடந்த 2004-ஆம் ஆண்டு திரு. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பணிகள் 2014-ஆம் ஆண்டு வரை துவக்கப்படவில்லை என்றும், 2016-ஆம் ஆண்டு திரு மோடி ரூ. 462 கோடி மதிப்பில் இந்தத் திட்டத்தைத் துவங்கி வைத்ததாக அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் 35,104 ஹெக்டர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைக்கும் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684003

**********************



(Release ID: 1684014) Visitor Counter : 243