பிரதமர் அலுவலகம்
ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுகின்றன: பிரதமர்
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி அரசின் மிகப்பெரும் முன்னுரிமைகளுள் ஒன்று: பிரதமர்
Posted On:
26 DEC 2020 2:10PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தைக் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு.அமித் ஷா, டாக்டர்.ஹர்ஷ் வர்தன், டாக்டர்.ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தப் பகுதியின் பயணிகளுடன் பிரதமர் உரையாடினார். ஜம்மு-காஷ்மீருடன் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் கொண்டிருந்த சிறப்பு நட்புணர்வை நினைவு கூர்ந்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, முன்னாள் பிரதமரின் அடிப்படைக் கொள்கைகளான மனிதநேயம், ஜனநாயகம், ஒருங்கிணைந்த காஷ்மீர் கலாச்சாரம் ஆகியவை நம்மைத் தொடர்ந்து வழி நடத்தும் என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டம் குறித்து பேசுகையில், ரூ.5 இலட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவதன் மூலம் எளிதான வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலத்தில் தற்போது சுமார் 6 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. செஹத் திட்டத்திற்குப் பிறகு அனைத்து 21 இலட்சம் குடும்பங்களும் அதே பயனை அடையும். இந்தத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக ஜம்மு-காஷ்மீரின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நாட்டின் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளிலிருந்தும் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் திட்டத்தின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் நீட்டிக்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறிய பிரதமர், மக்களின் வளர்ச்சிக்காக ஜம்மு-காஷ்மீர் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மக்களின் வளர்ச்சி, அரசின் மிகப் பெரும் முன்னுரிமைகளுள் ஒன்று என்று திரு.மோடி கூறினார். “பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களுக்கு வாய்ப்புகள், தலித்களின் முன்னேற்றம், ஏமாற்றப்பட்டும், சுரண்டப்பட்டும் வந்த மக்களின் நலன்கள், அரசியலமைப்பு, மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான கேள்விகள் இப்படி எதுவாயினும், மக்களின் நல்வாழ்விற்காக எமது அரசு முடிவுகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தி வருவதற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களைப் பிரதமர் பாராட்டினார். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் புதிய அத்தியாயத்தை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார். கடும் குளிரையும், கொரோனாவையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்த மக்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் முகத்திலும் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு தெரிந்ததாக திரு. மோடி குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் கண்களிலும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற இந்தத் தேர்தல்கள் நாட்டின் ஜனநாயகத்தின் பலத்தையும் காட்டின. உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ள போதும், புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். தேர்தல் மூலம் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் கடந்த 2011ஆம் ஆண்டே நிறைவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்று காலத்தில் சுமார் 18 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் ஜம்மு-காஷ்மீரில் நிரப்பப்பட்டதாக பிரதமர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டன கழிவறைகள் கட்டுவது மட்டும் இதன் நோக்கம் அல்ல, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இதன் முக்கியமான குறிக்கோளாகும். ஊரகச் சாலை இணைப்புகளோடு, ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய மேலாண்மைக் கழகம் போன்றவற்றை நிறுவுவதன் வாயிலாக இந்த பகுதியில் வாழும் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்க முடியும் என்று பிரதமர் கூறினார். இரண்டு எய்ம்ஸ் மற்றும் இரண்டு புற்றுநோய் நிறுவனங்களும் ஜம்மு-காஷ்மீரில் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். துணை மருத்துவ மாணவர்களுக்கும் இந்த நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் சுலபமாகக் கடன் பெற்று அமைதியான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் இருப்பிடச் சான்றிதழை தற்போது பெற்று வருகின்றனர். பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களும், மலைவாழ் மக்களும், எல்லைப்பகுதியில் வசிப்பவர்களும் இட ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்.
-----
(Release ID: 1683814)
Visitor Counter : 255
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam