குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் மன உளைச்சலைக் களைய யோகா மற்றும் தியானப் பயிற்சியை பொதுமக்கள் மேற்கொள்ள குடியரசுத் துணைத்தலைவர் வேண்டுகோள்

Posted On: 20 DEC 2020 6:41PM by PIB Chennai

நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் மன உளைச்சலைப் போக்கவும்தொற்று அல்லாத நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் முறையாக யோகா மற்றும் தியானப் பயிற்சியை மேற்கொள்வதுடன் பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், முறையற்ற வாழ்க்கை முறையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினார். “யோகா பயிற்சி, மன உளைச்சலை நீக்குவதுடன், நோய்கள் அண்டவிடாமல் தடுக்கிறது. எனவே அனைவரும் தினமும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அமர்ந்தபடியே பணிகளைச் செய்வது, சுகாதாரமற்ற மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக மன உளைச்சல், புகைப்பிடித்தல், புகையிலைப் பழக்கம் முதலிய வாழ்க்கை முறை மாற்றங்களால் தொற்று அல்லாத நோய்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறிய அவர்,  16 மில்லியன் மக்களில் குறைந்த வயதில்  அல்லது 70 வயதிற்குள்  உயிரிழந்தவர்களில் 82 சதவீதத்தினர் குறைவான மற்றும் நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊரகப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.  பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் நவீன மற்றும் தலைசிறந்த சுகாதார வசதிகள் இல்லாதது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், தனியார்துறை, அரசுடன் இணைந்து நவீன பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை ஊரகப் பகுதிகளில் குறைந்த செலவில், பொது-தனியார் கூட்டு முயற்சியில் ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பெருவாரியான மக்கள், மருத்துவச் செலவுக்காக தங்களது சக்திக்கு மீறிய தொகையை செலவு செய்வதாகக் கூறிய குடியரசுத் துணைத் தலைவர் இதனைக் கருத்தில் கொண்டு காப்பீட்டுத் திட்டம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து சுமார் 10.74 கோடி ஏழைக் குடும்பங்கள் வருடத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் வரை காப்பீடு பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அவர் வெகுவாகப் பாராட்டினர்.

மருத்துவத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டுமென்று மருத்துவப் பிரதிநிதிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதே வேளையில் மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மருத்துவத்துறையில் கடந்த தசாப்தங்களில் இந்தியா மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு.வெங்கையா நாயுடு, சமீப காலங்களில் மருத்துவச் சுற்றுலாத்தலமாக நாடு வளர்ந்து இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக  இந்தியாவிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வர். “ஆனால் வளர்ந்த நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குறைந்த விலையில் அளிக்கப்படும் தரமான மருத்துவத் தேவைகளுக்காக இங்கு வருகின்றனர்என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மருத்துவத்துறையில் நமது திறமை கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தெளிவாக வெளிக்கொணரப்பட்டதுடன், உலகளவில் பல்வேறு தலைசிறந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவுஎன்று அவர் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக் காலத்தில் தன்னல நோக்கமின்றி உழைத்த மருத்துவ, துணை மருத்துவ மற்றும் இதரப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டிய திரு.வெங்கையா நாயுடு, வெகு விரைவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரவிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682229

------



(Release ID: 1682263) Visitor Counter : 196