குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வரிச்சலுகைகள் வாயிலாக நிதி ஆணையங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 15 DEC 2020 1:11PM by PIB Chennai

வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக நிதி ஆணையங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பசுமைக் கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர ஒப்புதல் வழங்கும் வகையில் அனைத்து மாநிலங்களும் இணையதளங்களை உருவாக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள க்ரிஹா என்னும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு பசுமை மதிப்பீடு வழங்கும் குழுமத்தின் 12-வது உச்சி மாநாட்டை காணொலி வாயிலாக இன்று அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

உலக அளவில் பசுமைக் கட்டிடங்கள் இயக்கத்திற்கு தலைமை வகிக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதாக கூறிய அவர், அரசு மற்றும் தனியார் துறைகள் ஆகியவை பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பசுமைக் கட்டிடங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு தற்போது இல்லை என்று கவலை தெரிவித்த அவர், வெகுஜன ஊடகத்தின் வாயிலாக இதன் நன்மைகள் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார். “பசுமைக் கட்டிடங்கள் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்”, என்று அவர் குறிப்பிட்டார்.

 

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் கட்டிடங்களின் பங்கு முக்கிய அங்கம் வகிப்பதாக குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் கட்டிடங்கள் அமைவதை பங்குதாரர்கள் உறுதி செய்வது அவசியம் என்று தெரிவித்தார். “கட்டிடப் பணிகளுக்காக இன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் நீடித்த தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எதிர்கால தலைமுறையினர் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடாது” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வருங்காலத்தில் பசுமைக் கட்டிடங்களை அமைக்கவிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த திரு வெங்கையா நாயுடு, எதிர்காலத்தில் அமைக்கப்படும் அனைத்து விதமான கட்டிடங்களும் கட்டாயம் பசுமை அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய கட்டிடங்கள் மட்டுமல்லாது ஏற்கனவே உள்ள கட்டிடங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக எச்சரித்த அவர், பொருளாதார மேம்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இயற்கையை மதிப்பதன் மூலம் பொருளாதாரமும் சூழலியலும் இணைந்து செயல்படும் என்றார் அவர்.

வரும் 2050-ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் நகரங்களில் வசிக்கக் கூடும் என்றும் இதன் காரணமாக வீட்டுவசதித் துறையில் கூடுதல் சுமை ஏற்படும் என்பதால் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்ற பசுமை தீர்வுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

குளிரூட்டப்பட்ட கூரைகளை அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு வெங்கையா நாயுடு, இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் மேலான கூரைகள் உலோகம், கல்நார், கான்கிரீட் ஆகியவற்றால் அமைக்கப்படுவதால் கட்டிடத்தின் உள்ளே வெப்பம் அதிக அளவில் வெளிப்படுவதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, க்ரிஹா குழுவின் தலைவர் டாக்டர் அஜய் மாத்தூர், தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு சஞ்சய் சேத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680744



(Release ID: 1680807) Visitor Counter : 216