குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்திய மீன்வளத் துறைக்கு கொவிட்-19-ஆல் மிகப் பெரிய நன்மைகள் ஏற்படலாம்: குடியரசுத் துணை தலைவர்

Posted On: 07 DEC 2020 5:19PM by PIB Chennai

ஆரோக்கியமான உணவு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ளதால், இந்திய மீன்வளத் துறைக்கு கொவிட்-19-ஆல் மிகப் பெரிய நன்மைகள் ஏற்படலாம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

 

மத்திய கடல் மீன்வள நிறுவனம் மற்றும் மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளிடையேயும், பணியாளர்களிடையேயும் விசாகப்பட்டினத்தில் இன்று உரையாற்றிய அவர், மீன்களில் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளதாகவும், நாட்டில், குறிப்பாக குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் மீன்கள் முக்கிய பங்காற்றும் என்றும் கூறினார். 

 

நமது உணவு முறையில் மீன்களை சேர்ப்பதில் உள்ள நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குமாறு சுகாதார நிபுணர்களையும், ஊட்டச் சத்துவியலாளர்களையும் திரு நாயுடு கேட்டுக்கொண்டார்.

 

இந்தியாவில் மீன்களுக்கான வருடாந்திர தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புமாறு குடியரசுத் துணை தலைவர் வலியுறுத்தினார். மீன் ஏற்றுமதியில் உலகின் முதன்மை நாடாக இந்தியா திகழ வேண்டும்  என்று அவர் கூறினார்.

 

மீன்வளத் துறைக்கு கடன்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, சந்தை தொடர்புகள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதற்கான தேவை குறித்து திரு நாயுடு வலியுறுத்தினார்.

 

அளவுக்கதிகமான மீன்பிடித்தல், இயந்திரப் படகுகளின் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் கடல் மற்றும் நீர் மாசு குறித்து குடியரசுத் துணை தலைவர் கவலை தெரிவித்தார்.

 

தூய்மையான மற்றும் கவர்ச்சிகரமான மீன் சந்தைகளை உருவாக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

 

விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றைப் பார்வையிட்ட திரு நாயுடு, அந்நிறுவனங்களின் விஞ்ஞானிகளோடும், பணியாளர்களோடும் உரையாடினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678838


(Release ID: 1678873) Visitor Counter : 240