குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

முன்னாள் பிரதமர் திரு ஐ கே குஜ்ரால் நினைவு சிறப்பு தபால் தலை: குடியரசுத் துணைத் தலைவர் வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13, நாட்டிலேயே அதிகம் :
திரு வெங்கையா நாயுடு மகிழ்ச்சி

Posted On: 04 DEC 2020 1:09PM by PIB Chennai

இந்தியாவிலும், உலக அளவிலும் அரசியல், பொது நிர்வாகம், நிறுவன ஆளுகை, சமூக அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், எனினும் அவர்களின் பிரதிநிதித்துவம் மேலும் உயர வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் திரு..கே.குஜ்ராலின் நினைவுத் தபால்தலையை காணொலி வாயிலாக வெளியிட்டுப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக நான்கு பெண் நீதிபதிகள் நேற்று பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து மொத்த பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகள் பணிபுரிவதாகவும் அவர் கூறினார். பெண் நீதிபதிகளுக்கு வாய்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய மாநில அரசுகளைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் பெண் நீதிபதிகள் குறைவாக இருப்பது கவலையளிப்பதாகவும், இந்த எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு முக்கியத்துவம் வழங்கி இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான அரசியல், நிர்வாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

17-வது மக்களவையில் அதிகபட்சமாக 78 பெண் உறுப்பினர்கள் இருப்பதாகவும், எனினும் மொத்த எண்ணிக்கையில் இது வெறும் 14% மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டினால் லட்சக்கணக்கான பெண்கள் பொறுப்பு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய அவர், “ஆண்களின் உலகமாக இனி இருக்க இயலாதுஎன்றும், வளர்ந்து வரும்  அறிவுசார்ந்த சமூகத்தில் பெண்கள் தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாலினம் சார்ந்த வேறுபாட்டை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய திரு வெங்கையா நாயுடு, மாறாக அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நமது வீடுகள் மற்றும் உலகத்தை சிறந்த வாழ்விடமாக மாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு துறைகளில் பெண்கள் நுழைவதற்கு எதிரான தடைக்கற்களை நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீதி நிர்வாகம் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயரிய பொறுப்புகளை அவர்கள் வகிக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

தீவிரவாதம் முழுவதுமாகக் களையப்படும் வரை அதன் அச்சுறுத்தலால் தெற்காசிய மக்களின் எதிர்காலத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அண்டை நாடுகளுடன் அமைதியான, சுமுகமான, நட்பு ரீதியான உறவு முறையில் இந்தியா நம்பிக்கை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “துர்ப்பாக்கியவசமாக, கடந்த பல ஆண்டுகளாக, ஒரு அரசாங்கத்தின் ஆதரவுடன் இடைவிடாமல் தூண்டப்படும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை நாம் சந்தித்து வருகிறோம்என்று வேதனை தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளைத் தனிமைப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் திரு ஐ கே குஜ்ரால் குறித்துப் பேசுகையில், அவர் பல்வேறு சவால்களின் போதும், மாண்புகளை விட்டுக்கொடுக்காத, நற்பண்புகள் கொண்ட அரசியல்வாதியாகவும், மென்மையாகப் பேசக்கூடிய, அதிகம் கற்றவராகவும் திகழ்ந்தார் என்று திரு வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். மேலும், அனைவரிடமும் நட்புப் போக்கைக் கடைப்பிடித்து, தவறு செய்தவர்களை மன்னித்து, அரசியல்ரீதியாக அனைவரிடமும் நட்பு பாராட்டியவர் திரு குஜ்ரால் என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

திரு குஜ்ராலைப் போல அனைத்து அரசியல்வாதிகளும், எதிரானவர்களை எதிரிகளாக அல்லாமல் போட்டியாளர்களாகக் கருதி, அவர்களுடன் சுமுக உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகளும், தேசிய நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு நரேஷ் குஜரால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு தர்லோசன் சிங், தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறைத் தலைவர் திரு பி செல்வகுமார், சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் திருமதி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு ஆற்றிய முழு உரை பின்வருமாறு :

”முன்னாள் பிரதமர் திரு இந்தர் குமார் குஜ்ராலின் பிறந்த தினமான இன்று, அவரைக் கவுரவிக்கும் வகையிலான நினைவு அஞ்சல் தலையை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

திரு. குஜ்ரால், 1919-ல் ஜீலம் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) என்னும் இடத்தில், விடுதலைப் போராட்ட வீரர்கள் திரு ஏ.என். குஜ்ரால் மற்றும் திருமதி புஷ்பா குஜ்ராலுக்கு மகனாகப் பிறந்தார். திரு ஏ.என். குஜ்ரால் பின்னர் பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். அதற்கு முன்பாக அவரது குடும்பம் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டது.

திரு. குஜ்ரால் தமது அரசியல் வாழ்க்கையை மாணவர் தலைவராக துவங்கினார். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தார். அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது தமது பெற்றோருடன் கைது செய்யப்பட்டடார்.

நாட்டின் பிரிவனைக்குப் பின்னர், திரு குஜ்ரால் தில்லியில் தங்கி விட்டார். 1958-ல் தில்லி தேர்தல் சபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் புதுதில்லி மாநகராட்சி குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

1964-ம் ஆண்டு, தில்லியிலிருந்து அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் திருமதி இந்திரா காந்தி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் தொடர்புத் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார்.

திருமதி காந்தி பிரதமராக இருந்தபோது, வீட்டு வசதி, தொடர்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரம், தகவல் ஒலிபரப்பு துறை, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அவர் யு.எஸ்.எஸ்.ஆர் (சோசலிச சோவியத் ஒன்றிய குடியரசு)-ருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இந்திய- சோவியத் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். 

அதன் தொடர்ச்சியாக, திரு. வி.பி.சிங், திரு தேவ கவுடா ஆகியோரின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1996 முதல் 1998 வரை அவர் மாநிலங்களவை முன்னவராகவும் இருந்தார். 1997-ல், இந்தியாவின் 12–வது பிரதமராக அவர் பதவி வகித்தார். 1998-ல் அவர் பதவி விலகினார்.

கற்றறிந்த திரு குஜ்ரால், பழகுவதற்கு மென்மையான குணமுடைய பெருந்தன்மையான அரசியல்வாதியாக விளங்கினார். தாம் எதிர் கொண்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களால் தமது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். தமது நட்பு ரீதியிலான நடத்தை காரணமாக, அனைத்து அரசியல் கட்சிகளிலும் மரியாதையையும், நண்பர்களையும் சம்பாதித்தவர்.

அவர் பன்முகத் திறமை வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ள அவர், புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.  கவிதைகள் எழுதுவதிலும் அவர் திறன் பெற்றிருந்தார். நாடகம் மற்றும் காட்சிக் கலைகளில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த போது, அவரால் உருவாக்கப்பட்ட ‘குஜ்ரால் கோட்பாடு’ காரணமாக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார்.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, ஒவ்வொரு நாடும் தனது தேச நலனுக்கு ஏற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்றன. எந்தக் கொள்கையும் நிலையானதாக இருக்க முடியாது. புவி அரசியல் சூழல்களுக்கு ஏற்ப அது நகர்ந்து கொண்டேயிருக்கும்.

இந்தியா எப்போதும் தனது அனைத்து அண்டை நாடுகளுடன் அமைதியைப் பராமரிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. துர்ப்பாக்கியவசமாக, கடந்த பல ஆண்டுகளாக, ஒரு அரசாங்கத்தின் ஆதரவுடன் இடைவிடாமல் தூண்டப்படும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை நாம் சந்தித்து வருகிறோம்.

இன்று, கொரோனா பெருந்தொற்று பரவலால், உலகம் முழுவதும் மிக மோசமான பொருளாதார, சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அனைத்து நாடுகளும், குறிப்பாக தெற்கு ஆசியாவில், பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைப்பது, சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் மக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.

உலகின் மொத்த மக்கள் தொகையில் கால் பங்கை தெற்கு ஆசியா கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. வறுமை, படிப்பறிவின்மை, ஊழல் போன்ற தடைகளைக் களைந்து, தரமான கல்வி, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை அளித்து, மக்களுக்கு சிறப்பான, பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பை இந்தப் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பாலின பாகுபாட்டுக்கு முடிவு கட்டி, முன்னுரிமைக்கு ஏற்ற வகையில், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

அமைதிக்கும், வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் விட முன்னுரிமை அளிக்க வேண்டும். முன்னேற்றத்துக்கு அமைதியே மூல காரணமாகும். எந்த வளர்ச்சியும் அமைதியின்றி ஏற்படாது.

முன்னேற்றம், பிராந்தியத்தின் விரிவான நலன் ஆகியவற்றை மேம்படுத்த செயல்திறன் மிகுந்த, துடிப்பான அமைப்பாக சார்க் பிராந்திய அமைப்பு,  இருக்க வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்படாத வரை, தெற்காசிய மக்கள் அனைவருக்கும், முன்னேற்றத்துடன் கூடிய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் பயங்கரவாதம் முட்டுக்கட்டையாகவே இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபை, மேலும் துடிப்பாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நான் கருதுகிறேன். பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றுக்கு எதிராக தடைகளை விதிக்க முயற்சிகளை அது மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தாமதம் ஏற்படாத வகையில், ஐ.நா சபையில் விவாதங்களை முடிவுக்கு கொண்டு வந்து, சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

சகோதர, சகோதரிகளே, எனது அருமை நண்பர்களே, நமது பெரும் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பிரதமர் திரு குஜ்ராலின் அஞ்சல் தலையை காணொளி வழியாக வெளியிடும் நிகழ்ச்சியையொட்டி, தலைமைப் பொறுப்பில் மகளிர் அதிகமாகப் பங்கேற்பதும், மகளிர் அதிகாரப்படுத்தலும் மிகவும் அவசியம் என நான் கூற விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, தமிழகத்தின் வரலாற்று சாதனையைக் குறிப்பிட நான் விரும்புகிறேன்.

சென்னை உயர்நீதிமன்றம் மிக அதிகமாக 13 பெண் நீதிபதிகளைப் பெற்றுள்ளது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இவர்களில் நான்கு பேர் நேற்று பதவி உயர்வு பெற்றவர்கள். தற்போதுள்ள 63 நீதிபதிகளில், 13 பேர் பெண்கள். இது மொத்தத்தில் 21% ஆகும். நாட்டில் இதுவே அதிக அளவாகும். இது மிகுந்த பெருமைக்குரிய, பாராட்டுக்குரியதாகும்.

இந்த மெச்சத்தகுந்த முன்முயற்சியை மேற்கொண்ட, சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு, மத்திய அரசு ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன்.

1989-ம் ஆண்டு, நீதிபதி பாத்திமா பீவி உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை வெறும் எட்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளனர். தற்போது, மொத்தமுள்ள 33 நீதிபதிகளில், இரண்டு பெண் நீதிபதிகளும் இதில் அடங்குவர். நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில், 78 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உயர் நீதித்துறையில் பெண் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.

சிக்கலான முடிவெடுக்கும் தலைமைப் பொறுப்பில் பங்காற்றுவதில், பெண்களின் திறமை குறித்த விவாதத்துக்கு இது நம்மை எடுத்துச் செல்கிறது.

தலைமைப் பண்பு என்பது உடல் ரீதியிலானது அல்ல. ஆய்வுக்குரிய பிரச்சினைகளில் முழுமையாக ஆய்ந்தறியும் திறனை உள்ளடக்கியது அது.

அரசியல், பொது நிர்வாகம், பெரு வணிக நிர்வாகம், சிவில் சொசைட்டி அமைப்புகள் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை என்பது நாட்டிலும், உலகிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களது பிரதிநிதித்துவ விகிதம் பொருத்தமற்றதாகவே இருந்து வருகிறது.

நம் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தலைமைப் பொறுப்பில் லட்சக்கணக்கான பெண்களைப் பங்கேற்க வைத்துள்ளது. அனுபவத்தின் அடிப்படையில், அவர்கள் தங்களது கணவர்களின் உதவி இல்லாமலேயே, தங்களது செயல்பாடுகளை உறுதிப்படுத்தி வருகின்றனர். 

நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் இன்னும் மகளிர் பங்கேற்பு மிகவும் குறைவானதாக உள்ளது கவலைக்குரிய விஷயமாகும். தேவையான அரசியல் மற்றும் சட்ட முன்முயற்சிகள் மூலம், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். 17-வது மக்களவை மிக அதிக அளவாக 78 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் இது மொத்தத்தில் வெறும் 14 சதவீதம் மட்டுமே.

இதற்கு மேலும் உலகம் ஆடவர்களுக்கானதாக நீடிக்க வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு விரைவாக முடிவு கட்ட வேண்டும். உருவாகி வரும் அறிவுசார் சமுதாயத்தில் எல்லா வடிவங்களிலும் தங்களது வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

பாலின ரீதியான பாகுபாட்டை நியாயப்படுத்த முடியாது. மாறாக, பெண்களுக்கு உரிய பங்கை அளிப்பதன் மூலம், அவர்கள் வீடுகளையும், உலகத்தையும் எளிதான சிறந்த வாழ்விடங்களாக மாற்றுவார்கள். நீதித்துறை, சட்ட மன்றங்கள், அனைத்து விதமான நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து முடிவெடுக்கும் அதிகாரம் உடைய அமைப்புகளில் பெண்கள் அதிக இடம் பெறுவதற்கான தகுதி அவர்களுக்கு உள்ளது. பெண்கள் இவற்றில் நுழைவதற்கு உள்ள தடைகளை அகற்றுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த காரணத்துக்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகளை நியமித்தது தொடர்பான அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இது மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே,

கோவிட்-19 பெருந்தொற்று பொருளாதாரத்தை தீவிரமாகப் பாதித்து, நமது வாழ்க்கையில் முன்னெப்போதும் கண்டிராத வகையில் இடையூறுகளை ஏற்படுத்தி விட்டது.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைத்து முன்களப் பணியாளர்கள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக நான் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பொது முடக்கத்தின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும், தடங்கல்களையும் பொருட்படுத்தாமல், இடைவிடாத கடின உழைப்பு மூலம் போதுமான உணவு தானியங்கள் மற்றும் இதர வேளாண் பொருட்களை உற்பத்தி செய்துள்ள நமது விவசாயிகளைப் பாராட்ட நான் விரும்புகிறேன்.

நான் எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக, முகக்கவசங்கள் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிப்பது போன்ற அனைத்து முன்தடுப்பு விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றுமாறும், இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் இப்போது தடுப்பூசி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதுவரை, பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ளுவோமாக.

திரு. குஜ்ரால் நினைவாக, அஞ்சல் தலை மற்றும் உறையை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஜெய் ஹிந்த்!”

 



(Release ID: 1678298) Visitor Counter : 332