குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தண்ணீர் பாதுகாப்பு குறித்து தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் : குடியரசு துணைத்தலைவர்

Posted On: 19 NOV 2020 1:58PM by PIB Chennai

தண்ணீர் பாதுகாப்பு குறித்து, தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்கும் தண்ணீர் வீரராகத் திகழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   தண்ணீர் பற்றாக்குறை பற்றிய நிலைமையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதற்கு இதுவே உரிய தருணம் என்று குறிப்பிட்ட அவர்,  தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளை உடனடியாகவோ  அல்லது எதிர்காலத்தில் உலகில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பாகவோ  துவங்க வேண்டும் என்றார். 

தண்ணீர் சேமிப்பு உறுதிமொழியேற்பு தினத்தையொட்டி, நியூஸ்-18 மற்றும் ஹார்பிக் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி வாயிலாக பேசிய குடியரசு துணைத்தலைவர்,   தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுப்பதைத் தடுக்க கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.   நியூஸ்-18 - ஹார்பிக் நிறுவனங்களின் முன்முயற்சியைப் பாராட்டிய திரு.வெங்கையா நாயுடு, இது சரியான திசையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.   தண்ணீர் சேமிப்பு உறுதிமொழியேற்பு தினத்தை கொண்டாடுவதற்காகவும், இந்த நிறுவனங்களை அவர் பாராட்டினார். 

பூமியில் கிடைக்கும் 3 % தூய்மையான தண்ணீரில் 0.5% தான் குடிநீர் தேவைக்கு கிடைக்கிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.   உலகின் மொத்த மக்கள் தொகையில்,  18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில்,  புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4% மட்டுமே நாட்டில் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

ஐ.நா. அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசிய குடியரசு துணைத் தலைவர்,  சுமார்  2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை என்றும், சுமார் 4.2 பில்லியன்  மக்கள் அல்லது உலகின் மொத்த மக்கள் தொகையில் 55 % பேர், பாதுகாப்பான துப்புரவு வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.  

தண்ணீர் பற்றாக்குறையால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர்,   “தொலைதூரங்களுக்குச் சென்று தண்ணீர் பிடிப்பதற்காக, பெண்கள் தினந்தோறும் 200 மில்லியன் மணிக்கும் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்“ என்று தெரிவித்தார்.    “தாய்மார்களின் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளும் தினந்தோறும் 200 மில்லியன் மணி நேரத்தை தண்ணீர் பிடிப்பதற்காக செலவிட வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கக் கூடிய சில காரணங்கள் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர்,   “விரைவான நகரமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் விரிவாக்கம் மற்றும் வேளாண் சாகுபடி பணிகள்,  சட்டவிரோத ஆழ்குழாய் கிணறுகள், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீரின் அவசியம் தெரியாமல் வீணடிப்பது போன்ற காரணங்களால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது“ என்று தெரிவித்தார்.  

இந்தியாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்த குடியரசு துணைத்தலைவர்,  “இந்தியாவின் தண்ணீர் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றும்,   ‘நடப்பது நடக்கிறது‘  என்ற மனப்பான்மையுடன் அமைதியாக இருந்துவிட முடியாது என்றும் கூறினார்.  

இந்த நிலை மாற, மேலும் பல உறுதிமொழிகள் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு குளம், குட்டை, ஆறு, ஊற்றுகள், அருவிகள், சிற்றாறுகளையும், பிளாஸ்டிக் பைகள், சலவை சோப்புகள், மனிதக் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை கலக்காமல் பேணிக்காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.   பொருளாதார ரீதியாக சாத்தியமான பாசன முறைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளை வலியுறுத்திய அவர், உற்பத்தி நிறுவனங்களும், தண்ணீரை சேமிக்க உறுதியேற்பதோடு, பயன்படுத்தி முடித்த பிறகு குழாய்களை உடனடியாக மூடுமாறு  மக்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.    “அரசின் தண்ணீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு, ஒவ்வொரு குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும், விவசாயிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளும் துணை நிற்பதோடு, அரசு சாரா அமைப்புகளும் இதனை ஊக்குவிக்க வேண்டும்“ என்று வலியுறுத்தினார். 

நீர்நிலைகள் மாசுபடுவதையும், நிலத்தடி நீர் அசுத்தப்படுத்தப்படுவதைத் தடுக்கவும்,  வீடுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கவும் நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.   “வேளாண் சாகுபடி பணிகளுக்கு, சொட்டுநீர், தெளிப்புநீர் போன்ற நுண்ணீர் பாசன முறைகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும்“  என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கடல்நீரைக் குடிநீராக்குதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் மறுசுழற்சி போன்ற புதுமையான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதன் மூலம், தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வுகாண, விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் முன்வர வேண்டும் என்றும் திரு. வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.  

தண்ணீர் சேமிப்புக்காக, ‘மக்கள் இயக்கம்‘ மேற்கொள்ளப்பட வேண்டும் என அண்மையில் தாம் அழைப்பு விடுத்ததை நினைவுகூர்ந்த குடியரசு துணைத் தலைவர், தண்ணீர் சேமிப்புக்காக, அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.    “ கங்கை புணரமைப்புத் திட்டம், நாட்டின் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பிரதமரின் கிரிஷி சிஞ்சாய் திட்டம், அடல் பூஜல் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஜல் சக்தி அபியான்“   போன்ற திட்டங்கள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் தெரிவித்தார்.  

தண்ணீர் வளங்களின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கு உத்வேகம் அளித்து, தண்ணீர் வளப் பாதுகாப்பு, ஊற்றுகளை நிரப்புதல், மறு பயன்பாடு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய, ஜல் சக்தி (நீர்வள) அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  

தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சில மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், மேகாலயா அரசின் தண்ணீர் கொள்கை மற்றும்  ‘கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு‘  வழங்கும் திட்ட இலக்கை எட்டி சாதனை படைத்த கோவா  அரசின் நடவடிக்கையையும் பாராட்டினார்.   ஒவ்வொரு மாநிலமும் தண்ணீர் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய ஹரியானாவின் குருகிராம், மற்றும் மழைநீரை 3.57 டி.எம்.சி. அளவிற்கு சேகரித்த ஆந்திரபிரதேச அரசின் முயற்சிகளும் பாராட்டுக்குரியவை என்று அவர் குறிப்பிட்டார்.  

நியூஸ் 18 தொலைக்காட்சியின் இந்த முன்முயற்சியைப் பாராட்டிய திரு.வெங்கையா நாயுடு, தண்ணீர் சேமிப்பு பற்றிய தகவல்கள் மக்களை எளிதில் சென்றடைய ஏதுவாக,  ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனமும், இதுபோன்ற முன்முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.   தண்ணீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு, திரையுலக, அரசியல், சமூக  பிரபலங்கள் மற்றும் இதர துறைகளின் முன்னோடிகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி இயற்றி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தண்ணீர் பற்றிய பாடலுக்காக, அவர்களுக்கு  குடியரசு துணைத்தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.  

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், நியூஸ்-18 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் திரு.கிஷோர் அஜ்வானி, செயல் ஆசிரியர் திரு.ஆனந்த் நரசிம்மன், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோரும், காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

குடியரசுத் துணைத் தலைவரின் முழு உரையைப் படிக்க இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673982

 

*******

(Release ID: 1673982)


(Release ID: 1674011) Visitor Counter : 907