அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

விரைவில் வருகிறது அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை

Posted On: 13 NOV 2020 9:44AM by PIB Chennai

அறிவியல் மற்றும் சமூகத்தின் இடையே தொடர்பை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த சமூக பொறுப்புத் தன்மை குறித்த கொள்கை விரைவில் கொண்டுவரப்பட இருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணைய கருத்தரங்கில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அறிவியல் மற்றும் சமூகத்தை இணைப்பதன் மூலம் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய தூணாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும். அறிவியல் சார்ந்த தகவல்களை பெருவாரியான மக்களைக் கொண்ட சமூகத்துக்கு கொண்டு செல்வது மிகப்பெரும் சவாலாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிவியல் குறித்த தகவல்கள் சென்று அடைவதன் மூலம் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக இது விளங்கும்”, என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனமான யுனெஸ்கோ மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து அமைதி மற்றும் மேம்பாடு குறித்த உலக அறிவியல் தின இணைய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமத்துவம் மற்றும் பன்முகத் தன்மையின் முக்கியத்துவம் குறித்து பேசிய பேராசிரியர் சர்மா, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் பெண்களையும் ஊக்கப்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் 10 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் பத்தாம் தேதி உலக அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. சமூகத்துடன் மற்றும் சமூகத்துக்காக அறிவியல் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672492

**********************(Release ID: 1672652) Visitor Counter : 159