பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மாண்புமிகு டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கேபிரெசஸ் உடன் தொலைபேசியில் உரையாடினார்

Posted On: 11 NOV 2020 8:52PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மாண்புமிகு டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கேபிரெசஸ் உடன்  இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

கோவிட்-19 பெருந்தொற்று நோய் பாதிப்பை கையாள்வதில் உலக அளவில் கூட்டு முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்துவதில், உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்கு வகித்தமைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார். மற்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் கவனத்தை இழந்துவிடக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். வளரும் நாடுகளில் சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்து வருவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய சுகாதாரத் துறையினருக்கும், உலக சுகாதார அமைப்பிற்கும் இடையில் நெருக்கமான, தொடர்ந்து கூட்டு செயல்பாடுகள் இருப்பது பற்றி டைரக்டர் ஜெனரல் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், காசநோய்க்கு எதிரான இந்தியாவின் முயற்சிகள் போன்ற உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை அவர் பாராட்டினார். உலக சுகாதாரப் பிரச்சினைகளில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாரம்பரிய மருத்துவ முறைகளின் மதிப்பு குறித்து டைரக்டர் ஜெனரலும், பிரதமரும் ஆக்கபூர்வ கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டனர். குறிப்பாக ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துதலில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கு பற்றி அவர்கள் கலந்தாடல் செய்தனர். முழுமையான சிகிச்சை முறைகளில் நவீன மருத்துவத்துடன், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் உள்ளதை இருவரும் ஒப்புக்கொண்டனர். பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் மற்றும் நடைமுறைகளை கவனமாக அறிவியல்பூர்வ ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

பாரம்பரிய மருந்துகளின் செயல்திறன் இதுவரையில் போதிய அளவுக்கு மேன்மையாக முன்வைக்கப்படவில்லை என்று டைரக்டர் ஜெனரல் கூறினார். இந்தத் துறையில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகளை ஊக்குவிக்க உலக சுகாதார அமைப்பு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவில் ஆயுர்வேத தினம் கொண்டாட திட்டமிடப் பட்டிருப்பது பற்றி டைரக்டர் ஜெனரலிடம் பிரதமர் கூறினார். `கோவிட்-19 சிகிச்சைக்கு ஆயுர்வேதம்' என்ற தலைப்பில் இந்த தினம் கொண்டாடப் படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள உலக அளவில் கூட்டு செயல்பாடுகள் குறித்து பிரதமரும், டைரக்டர் ஜெனரலும் கலந்துரையாடினர். தடுப்பு மருந்துகள் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு என்ற வகையில், தங்கள் திறன்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில், பிரதமர் தீவிர முயற்சிகள் எடுத்தமைக்கு டைரக்டர் ஜெனரல் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

*****************


(Release ID: 1672194) Visitor Counter : 201