சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாகன உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும்: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி
Posted On:
06 NOV 2020 4:44PM by PIB Chennai
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் கர்நாடக மாநிலக் கிளை ஏற்பாடு செய்த 'எலக்ட்ரிக் வாகன கருத்தரங்கு 2020' என்ற இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய திரு நிதின் கட்கரி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கி அரசு பணியாற்றுகிறது என்றார். "எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மேற்கொள்வதை அரசு தொடர்ந்து ஊக்குவிப்பதன் காரணமாக உலகின் பெரிய மின்சார வாகனங்கள் சந்தையாக இந்தியா உருவெடுக்கும்," என்று குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றிய அவர், எலெக்ட்ரிக் வானங்கள் உற்பத்தி செலவை ஆட்டோமொபைல் தொழில்துறையினர் குறைத்தால், விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும், எண்ணிக்கை அதிகரிப்பதால் அது சார்ந்த தொழிற்துறையினர் பலன் பெறுவர் என்றும் கூறினார். வாகனங்களின் தரத்தை நிர்வகிப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆட்டோமொபைல் துறையில் அதிகபட்ச உற்பத்தியால், வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும் என்று குறிப்பிட்டார். திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வல்லமையை இந்திய உற்பத்தியாளர்கள் பெற்றிருக்கின்றனர் என்றும், இதன் வாயிலாக அதிக வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெற முடியும் என்றும் தெரிவித்தார். "இ-வாகனங்கள் அதிகத் திறன் கொண்டவையாகவும், சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் இருக்கும். கச்சா எண்ணைய் இறக்குமதி மற்றும் காற்று மாசு ஆகியவை நாட்டின் இரண்டு பிரச்சினைகள். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை ஒருங்கிணைந்த அணுகுமுறையில் மேற்கொள்ள வேண்டும்", என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670660
**********************
(Release ID: 1670843)
Visitor Counter : 210