குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் கடன் வாங்கித் தருவதாக மோசடி: போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

Posted On: 06 NOV 2020 4:53PM by PIB Chennai

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் (பிஎம்இஜிபி) திட்டத்தின் கீழ் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுபவர்களிடம் இருந்து பொதுமக்களும், தொழில்முனைவு ஆசையில் இருப்போரும் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சில தனிநபர்கள் அல்லது முகமைகள் பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, அதற்கான கடன் அனுமதி கடிதத்தை போலியாகத் தயாரித்து அதைக் காட்டி பணம் பறிக்க பொதுமக்கள், தொழில் முனைவு ஆசையில் இருக்கும் இளைஞர்களை அணுகுவதாக அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி நேர்மையற்ற வகையில் மக்களை ஏமாற்றுவபவர்களை அமைச்சகம் கடுமையாக எச்சரிக்கிறது. ஏமாற்றுவோர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கவும், விசாரணை மேற்கொள்ளவும் அமைச்சகத்தின் சார்பில் இது குறித்து ஏற்கனவே காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் கடனோடு இணைந்த மானிய திட்டமாகும். இது எம்எஸ்எம்இ அமைச்சகத்தால் கடந்த 2008-09ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் குறுநிறுவனங்களை உருவாக்குவதற்காக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறுதல், விண்ணப்பத்துக்கான ரசீது வழங்குவது முதல் கடன் அனுமதி, விண்ணப்பதாரர் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடன் தொகையை செலுத்துதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் காதி மற்றும் கிராம தொழிலகள் ஆணையத்தின் ஒரே ஒரு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது (https://www.kviconline.gov.in/pmeepeportal/pmegphome/index.jsp). இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

பிஎம்இஜிபி திட்டத்தை அனுமதிக்க, முன்னெடுக்க‍ அல்லது எந்த ஒரு நிதி உதவியும் அளிக்க எந்த ஒரு தனிநபருக்கு /முகவருக்கு / இடைத்தரகருக்கு / கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.

சில தனிநபர்கள் அல்லது முகமைகள் பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, அதற்கான கடன் அனுமதி கடிதத்தை போலியாகத் தயாரித்து அதைக் காட்டி பணம் பறிக்க பொதுமக்கள், தொழில்முனைவு ஆசையில் இருக்கும் இளைஞர்களை அணுகுவது முற்றிலும் சட்டவிரோதமாகும். போலியான நடவடிக்கையாகும். இது போன்ற நேர்மையற்ற செயல்களில் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

**********************



(Release ID: 1670838) Visitor Counter : 163