நிதி அமைச்சகம்

கேரளா, மேற்கு வங்கம், தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல்

Posted On: 06 NOV 2020 3:12PM by PIB Chennai

கேரள மாநிலத்தில் அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை, மேற்கு வங்கத்தில் நிலக்கரி வர்த்தக நிறுவனம் ஒன்றில் நடந்த வருமானவரி சோதனை ஆகியவற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள மதபோதகர் ஒருவருக்குச் சொந்தமான குழுமத்தின் பல்வேறு அறக்கட்டளைகளில் நவம்பர் 5-ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொண்டு, மத அறக்கட்டளைகளாக 1961-ஆம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் விலக்குப் பெற்று இவை நடத்தப்பட்டு வந்தன. இந்த குழுமத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும் வழிபாட்டு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன.

கேரள மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, சண்டிகர், பஞ்சாப் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 66 இடங்களில் வருமானவரி சோதனைகள் நடைபெற்றன.

இந்த குழுமம் குறித்து கிடைந்த நம்பகமான தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும், சுவிசேஷ நோக்கங்களுக்காகவும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை அறக்கட்டளைகள் பெற்று வந்தன. ஆனால், வரி விலக்குப் பெற்ற இந்த நிதியை கணக்கில் வராத பணப் பரிமாற்றங்களாக சொந்த உபயோகத்துக்காகவும், ரியல் எஸ்டேட் வணிக பரிமாற்றங்களுக்கும், சட்டவிரோத செலவுகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த குழுமத்துக்குச் சொந்தமாக 30 அறக்கட்டளைகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான அறக்கட்டளைகள் வெறுமனே ஆவணமாக மட்டுமே உள்ளன. பணத்தை வேறு வழிகளுக்கு மாற்றுவதற்காகவே இந்த அறக்கட்டளைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.

சோதனையின் போது கணக்கில் வராத ரொக்கப்பணம் பல்வேறு ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள், சொத்து விற்பனை பத்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில் இருந்து ரூ.3.85 கோடி பறிமுதல் உட்பட கணக்கில் வராத ரூ.6 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா, புருலியா, ராணிகஞ்ச், அசன்சோல் ஆகிய இடங்களில் நிலக்கரி வர்த்தககர் ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் 5-ஆம் தேதி வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

சோதனையின் போது, மதிப்பு குறிப்பிடப்படாத போலியான முதலீடு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.150 கோடியாகும். இவை மோசடிப் பணப்பரிவர்த்தனைகள் என்று நிறுவனத்தின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மணல், நிலக்கரி வணிகங்களின் வாயிலாக நடைபெற்ற பணப்பரிவர்த்தைகளுக்கான ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பல்வேறு வணிக செயல்பாடுகளுக்காக, நிலக்கரி போக்குவரத்துக்காக கணக்கில் காட்டப்படாத செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையின்போது ரூ.7.3 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670628

**********************(Release ID: 1670752) Visitor Counter : 148