ஜல்சக்தி அமைச்சகம்

அருணாச்சலப் பிரதேசத்தில் சமூகப் பங்களிப்புடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம்

Posted On: 05 NOV 2020 3:29PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நம்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது, மைமி என்னும் சிறிய கிராமம். மொத்தம் 42 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்த போதிலும், அங்கு நிலவி வரும் பாதுகாப்பான குடிநீருக்கான தட்டுப்பாடு, பல ஆண்டுகளாக அவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

மைமி கிராமத்தில் வசிக்கும் பெண்கள், தங்கள் வீடுகளிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய நீரோடைக்குச் சென்று அங்கிருந்து தண்ணீரை எடுத்து வந்து தங்களது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களது வீடுகளில் கைப்பிடி குழாய் வசதிகள் இருந்தபோதும் போதிய பராமரிப்பு இல்லாததால் அவை துரு பிடித்துள்ளன.

பருவமழை காலத்தில் ஓடையில் இருந்து அதிக அளவில் நீர் செல்வதால், மண்ணுடன் கலந்த நீரே அவர்களுக்குக் கிடைக்கிறது. இதுபோன்ற சுகாதாரமற்ற குடிநீரைப் பயன்படுத்துவதால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியோரைப் பல்வேறு நோய்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றன.

மத்திய அரசின் முதன்மை திட்டங்களுள் ஒன்றான ஜல் ஜீவன் இயக்கம் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் அந்தப் பகுதி மக்களிடம் விவரிக்கையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற வார்த்தை அவர்கள் கண்களைப் பனிக்கச் செய்தது. சமூகப் பங்களிப்புடன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அரசின் நோக்கத்தை முழுவதுமாக பின்பற்றி மைமி கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் இதனை செயல்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்கிணற்றில் இருந்து குழாயின் வழியாக ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் வழங்கும் சூரிய சக்தியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு கிராம சபை ஒப்புதல் வழங்கியது. கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் பொறுப்புகளும் கடமைகளும் அனைவருக்கும் விளக்கப்பட்டன. கிராமத்தில் உள்ள முதியவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த குழுவில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஜல் ஜீவன் இயக்கத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணி ஆகும்.

மைமி கிராமத்திற்கு தண்ணீர் வழங்க மாநில திட்ட ஒப்புதல் குழு அனுமதி வழங்கி, இதனை வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மக்களின் முழு ஆதரவுடன் உற்சாகமாக செயல்படுத்தப்படுவதால் அடுத்த ஒரு சில மாதங்களில் மைமி கிராமத்திற்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670340

------



(Release ID: 1670368) Visitor Counter : 131