இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

‘விளையாடு இந்தியா’ போலி விளம்பரம் வாயிலாக தடகள வீரர்களிடம் பணம் பறித்த கும்பலுக்கு எதிராக புகார்

Posted On: 04 NOV 2020 10:38PM by PIB Chennai

அரசு வெளியிட்டது போல விளையாடு இந்தியா எனும்  போலி விளம்பரத்தை தயாரித்து வெளியிட்டு அதன் வாயிலாக நாடு் முழுவதும் உள்ள தடகள வீரர்களிடம் இருந்து பணம் பறித்த கும்பலுக்கு எதிராக இந்திய விளையாட்டு ஆணையம் உத்தரபிரதேச போலீஸாரிடம் புகார் அளித்துள்ளது.

2021-ம் ஆண்டில் ஹரியானா மாநிலத்தில் விளையாடு இந்தியா சார்பில் விளையாட்டுகள் நடப்பதாகவும், அதில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் வெளியாகி இருப்பதாக, நாடு முழுவதும் அடிமட்டத்தில் இருக்கும் தடகள வீரர்களிடம் இருந்து இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு புகார் வந்தது.

மேலும் அந்த விளம்பரத்தில், போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் விளையாடு இந்தியா முகாமில் பதிவு செய்வதற்கு தலா ரூ.6000 பணம் செலுத்தும்படியும், பணம் செலுத்துபவர்கள் சோதனைக்குப் பின்னர் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என்றும் விளம்பரத்தில்  கூறப்பட்டிருந்தது

அந்த விளம்பரத்தில் ஒரு தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு விளையாட்டு வீரர்போல, அந்த விளம்பரத்தில் தரப்பட்டிருந்த எண்ணுக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் தொடர்பு கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரமும் பெறப்பட்டது. அந்த நபர் ஆக்ராவை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், விளையாடு இந்தியா ஆகியவற்றின் லோகோ-க்கள்  இடம் பெற்றிருந்தனஎனவே இது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட விளம்பரம் என பெரும்பாலான தடகள வீரர்கள் நம்புவதற்கும் வழிவகுத்தது.

இதையடுத்து இது குறித்து உத்தர பிரதேச மாநில போலீஸாரிடம் இந்திய விளையாட்டு ஆணையம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது. விளையாடு இந்தியா என்பது அரசின் திட்டமாகும். இதில் பங்கேற்பதற்கு தடகள வீரர்கள் எந்தப் பணமும் செலுத்த வேண்டியதில்லை. இதில் பங்கேற்பதற்கு விளையாட்டு ஆணையமோ/விளையாடு இந்தியாவோ எந்தவித பரிசோதனையும் நடத்துவதில்லை. இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு/இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைக்கும் பல்கலைக்கழக விளையாட்டுகள் /பள்ளி விளையாட்டுகளில் பங்கேற்பு செயல்திறனுக்கு ஏற்ப விளையாடு இந்தியா விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு தடகள வீரர்கள் தகுதி பெறுகின்றனர்.

----



(Release ID: 1670352) Visitor Counter : 112