மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சர், வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, அதன் 3 புதிய கட்டிடங்களைத் திறந்து வைப்பு

Posted On: 22 OCT 2020 8:06PM by PIB Chennai

வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில், மெய்நிகர் வாயிலாகக் கலந்துகொண்டு, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' தொழில்நுட்பக் கழகத்தின் 3 புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். பண்டித மதன் மோகன் மால்வியா கல்வி பயிற்சி மையம், விஸ்வேஸ்வரய்யா திறன் மேம்பாட்டு மையம், சர்தார் வல்லபாய் பட்டேல் விருந்தினர் இல்லம் ஆகிய மூன்று கட்டிடங்களைத் திறந்து வைத்தபின் வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள ருத்ரமாதேவி பெண்கள் விடுதிக்கான அடிக்கல்லையும் அமைச்சர் நாட்டினார். கொவிட்-19 பரவல் காலத்தில் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக மாணவர்களுக்குப் பட்டமளிப்பு தொப்பிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', மாணவர்கள் பல்வேறு சவால்களையும் தடைகளையும் தாண்டி வித்தியாசமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைவருக்கும் சமமான, மாணவர்கள் எளிதில் பெறக் கூடிய வகையிலான கல்வியை வழங்குவதே கல்வித்துறை சீர்திருத்தங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் இந்தியாவை முதன்மை நாடாக உருவாக்கும் முயற்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதாக அமைச்சர் திரு பொக்ரியால் தெரிவித்தார்.

          மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களை குறிப்பிட்ட அமைச்சர், இதுபோன்ற திட்டங்களால் உலக அளவில் முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா வளர்ந்து இருப்பதாகவும், 21 ஆவது நூற்றாண்டின் பொன் இந்தியாவை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666862

-----


(Release ID: 1666902)