சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
14 மாநிலங்களில் குடற்புழு நோய் தாக்கம் குறைந்திருக்கிறது
Posted On:
20 OCT 2020 12:36PM by PIB Chennai
தேசிய குடற்புழு நீக்க தினம் தொடர்ந்து கடைபிடிக்கப்படதன் காரணமாக 14 மாநிலங்களில் குடற்புழு நோய் தாக்கம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் பரவும் குடற்புழு தொற்று எனும், ஒட்டுண்ணி குடல் புழு தொற்று என்பது முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மற்றும் உடல் நலனில் இவை தீங்கு விளைவிக்கின்றன. அவர்களை அமீனியா மற்றும் ஊட்ட சத்து குறைந்தவர்களாக ஆக்குகிறது. மண்மூலம் பரவும் குடற்புழு தொற்று சுமை அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பருவ வயதினர் மத்தியில் குடற்புழு தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக முறையாக குடற்புழு நீக்க முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் நல்ல ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியதைப் அடைய முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வாயிலாக 2015-ம் ஆண்டு முதல் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு நாட்கள் கடைபிடிக்கப்படும் இந்த தினம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் அமல்படுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்பெண்டசோல் மாத்திரையானது, உலகம் முழுவதும் இந்த தினத்தன்று குடற்புழு நீக்கத்துக்காக குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்குத் தரப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடற்புழு நீக்க தினத்தன்று 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 11 கோடி குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மண்மூலம் பரவும் குடற்புழு தொற்று பரவலை கண்டறிய தேசிய தொற்று கட்டுப்பாடு மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகமானது முகமையாக நியமித்தது. இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கடந்த 2016-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆய்வின்படி மத்திய பிரதேச மாநிலத்தில் 12.5 சதவிகிதம் முதல் தமிழ்நாட்டில் 85 சதவிகிதம் வரையும் நோய்பரவலானது மாறுபட்ட தாக்கங்களுடன் காணப்பட்டது கண்டறியப்பட்டது.
தேசிய குடற்புழு நீக்க தினம் தொடர்ந்து கடைபிடிக்கப்படதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை கண்டறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் தேசிய தொற்று கட்டுப்பாடு மையம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது வரை இந்த ஆய்வு 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 14 மாநிலங்களிலும் முந்தைய அடிப்படை ஆய்வுக்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டபின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கும் இடையே தொற்றுப் பரவல் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. சத்தீஸ்கர், இமாசலப்பிரதேசம், மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் குடற்புழு தொற்றின் தாக்கம் கணிசமான அளவு குறைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666053
(Release ID: 1666071)
Visitor Counter : 949