பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

வடகிழக்கு மாகாணங்களில் வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறியவும் அவற்றை மேம்படுத்தவும் பிரிட்டிஷ் அரசுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

Posted On: 19 OCT 2020 5:41PM by PIB Chennai

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வர்த்தகத்தை அதிகரிக்க முன்வருமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தையும், தனியார் துறையையும், மத்திய வட கிழக்கு மாகாணங்களுக்கான மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் உயர் ஆணைய அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், வர்த்தகத் துறையில் இரு நாடுகளும் சுமுக உறவை நிலைநாட்டி வருவதாகும், இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறியவும் அவற்றை மேம்படுத்தவும்

பிரிட்டிஷ் அரசு முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் இந்தப் பகுதிகளில் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட ஏதுவான சூழல் நிலவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பிரபலமான கலைப் பொருட்கள், காய்கறிகள் பழங்கள் மற்றும் வாசனைப் பொருட்களை வெகுவாகப் பாராட்டிய பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தனர்.

வடகிழக்குப் பகுதியில் உள்ள 8 மாநிலங்களில் அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களை பயிற்றுவிப்பது தொடர்பாக வடகிழக்கு குழுமத்திற்கும், பிரிட்டிஷ் குழுமத்திற்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம் குவஹாத்தி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்ற பிரிட்டிஷ் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக வடகிழக்கு மாகாணங்களும் வளர்ச்சி அடைந்திருப்பதாக அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665839

-----



(Release ID: 1665925) Visitor Counter : 182