குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாணவர்களின் மீதான சுமையைக் குறைத்தமைக்காக குடியரசுத் துணைத் தலைவர் புதிய கல்விக் கொள்கைக்குப் பாராட்டு

முழுமையான வளர்ச்சியை வலியுறுத்தும் ஒரு தொலைநோக்கு ஆவணம் புதிய கல்விக் கொள்கை 2020 என சித்தரிப்பு

புதிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழி மீது கவனம் செலுத்துவது இந்திய மொழிகளைக் காக்கவும், வளர்க்கவும் முக்கியமானது – குடியரசுத் துணைத் தலைவர்

தேசமே முதன்மையாக, மற்ற அனைத்துமே தேசிய நலன்களுக்குக் கீழ்ப்படிந்ததாக கருதும் தேசிய இலட்சியவாத உணர்வும் மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்

மெய்நிகர் வகுப்புகள் தற்காலிக ஏற்பாடு மட்டுமே; நேரடியான வகுப்பறைக் கல்விக்கு அது மாற்றாகி விட முடியாது

ராஜலஷ்மி பார்த்தசாரதி முதல் நினைவு சொற்பொழிவை ஆற்றினார் குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 06 AUG 2020 7:43PM by PIB Chennai

பாடதிட்டத்தின் அளவைக் குறைத்ததன் மூலம் மாணவர்களின் சுமையைக் குறைத்தமைக்காக இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இன்று புதிய கல்விக் கொள்கையைப் பாராட்டினார்.

இன்று காணொளிக் காட்சியின் மூலம் ராஜலஷ்மி பார்த்தசாரதி முதலாவது நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது, உடல்ரீதியான செயல்பாடுகள், விளையாட்டு ஆகியவற்றுக்கும் சமமான முக்கியத்துவம் தரும் வகையில் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். ஆரம்ப வயதில் இருந்தே பள்ளிப் பாடதிட்டத்தின் உள்ளார்ந்த அங்கமாக யோகாவை இணைக்க வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்கள் வகுப்பறைகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் சமமான நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு கொண்டதோர் ஆவணம் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அது முக்கியத்துவம் தருகிறது என்று கூறினார். புதிய கல்விக் கொள்கை 2020 கற்பவர்களை மையமாகக் கொண்டுள்ளது என்று மேலும் குறிப்பிட்ட அவர், இந்தியாவை அறிவுபூர்வமானதொரு சமூகமாக மாற்றுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவை மையமாகக் கொண்டு, அதன் பெருமையோடு கூடவே உலகம் முழுவதிலும் உள்ள கற்றல், உலகின் மிகச் சிறந்த கருத்துக்களையும், செயல்முறைகளையும் ஏற்றுக்கொள்வது என்ற மிகச் சரியான சமநிலையை இக்கொள்கை கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழிக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு. நாயுடு நமது இந்தியாவின் செழுமையான மொழிகளைப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  “எந்தவொரு மொழியையும் திணிப்பதோ, எதிர்ப்பதோ இருக்கலாகாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வந்திருக்கிறேன்” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கொள்கையளவிலும், நடைமுறை அளவிலுமான கல்வி என்பதே ஒருங்கிணைந்த வாழ்க்கையாகும் என்றும் பள்ளிக் கல்வி என்பது இந்த அம்சத்திலேயே கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் தேசமே முதன்மையானதாக, மற்ற அனைத்துமே தேசத்தின் நலன்களுக்குக் கீழ்ப்பட்டதாக இருக்கும் தேசத்தின் மீதான லட்சியவாத உணர்வை மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கல்வியின் தரங்களை உயர்த்த வேண்டியதன் தேவையையும், ஆசிரியர்களின் தொழில்முறையிலான திறமையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திரு. நாயுடு ஆசிரியர்கள் நட்புணர்வு கொண்ட வழிகாட்டிகளாகவும் தங்களின் நடத்தை, அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு முன்மாதிரிகளாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் இந்தியாவின் கலைகள், கலாச்சார பாரம்பரியம் ஆகியவை குறித்த புரிதல், பாராட்டுணர்வு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாணவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் தனித்தன்மை, அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை அறிந்தவர்களாக இருப்பதோடு, தேசிய வாத சித்திரத்தின் உச்சகட்ட அடையாளமாகவே பாரதமாதா இருக்கிறார் என்பதையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மகாகவி பாரதியாரின் கவிதை ஒன்றை சுட்டிக் காட்டிப் பேசிய திரு. நாயுடு நமது மகத்தான பாரத நாட்டின் அடிப்படையான உணர்வாக பன்முகத்தன்மையோடு உள்ளார்ந்த ஒற்றுமை என்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

வழக்கமான கல்வி அட்டவணையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள இடையூறு குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய குடியரசு துணைத்தலைவர் மெய்நிகர் வகுப்புகள் என்பவை தற்காலிகமான ஏற்பாடுகள் மட்டுமே என்றும் ஓர் ஆசிரியரின் இடத்தை அதனால் இட்டு நிரப்ப முடியாது என்றும் குறிப்பிட்டார். நேரடியாக வகுப்பறையில் கிடைக்கும் கற்றல் உணர்வை எந்தவித மெய்நிகர் ஏற்பாடும் தர முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

திருமதி ஒய் ஜி பி என்று பரவலாக அறியப்பட்ட டாக்டர் திருமதி ராஜலஷ்மி பார்த்தசாரதி பன்முகத் தன்மை மிக்கதொரு ஆளுமை என்று வர்ணித்த குடியரசுத் துணைத்தலைவர் கல்வியின் மீதான அவரது அர்ப்பணிப்பை பாராட்டியதோடு, பத்மா சேஷாத்ரி பால பவன் க்ரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் போன்றதொரு நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் அவர் வெளிப்படுத்தியிருந்த பற்றுறுதியையும் பாராட்டினார்.

“திருமதி. ராஜலஷ்மி பார்த்தசாரதியைப் போன்றவர்களின் பணிகளில் தான் முன் ஒரு காலத்தில் உலகத்திற்கே குருவாகத் திகழ்ந்த இந்தியாவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. கல்வி உள்ளிட்டு பல்வேறு துறைகளிலும் இழந்த தனது புகழை மீட்டெடுக்கும் முயற்சியில் அது அடங்கியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியத் தன்மை என்ற உணர்வை மீட்டெடுப்பது, வளர்ப்பது ஆகிய நோக்கங்களுடன் பத்மா சேஷாத்ரி பால பவன் க்ரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் உருவாக்கப்பட்டது  என்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட குடியரசுத் துணைத்தலைவர், மாணவர்கள் தங்களது கலாச்சாரப் பாரம்பரியத்தை உணர்ந்தவர்களாக, இந்தியா மற்றும் உலகத்தின் மிகச் சிறந்த நடைமுறைகளை இணைந்த வகையில் கற்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருமதி. ராஜலஷ்மி பார்த்தசாரதி தனது பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை “ஸ்ரீ குருப்யோ நமஹ!” (குருவே உங்களுக்கு வணக்கம்) என்று வணங்கும்படி கூறுவது வழக்கம் என்பதை சுட்டிக் காட்டிய திரு. நாயுடு இன்றைய நவீன காலத்தில் இந்தியாவில் காலம் காலமாக நீடித்து வந்த தர்மரீதியான பாரம்பரியங்களின் நிகழ்காலப் பொருத்தப்பாட்டை வலியுறுத்தி வந்தமைக்காகவும் அவரைப் பாராட்டினார்.

*****



(Release ID: 1651283) Visitor Counter : 125