புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின் சக்தி, புதிய, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் துறைகளின் அமைச்சர், ஏ ஆர் இ ஏ எஸ் அமைப்பின் ஆறாவது நிறுவன நாள் விழாவில் இணையதள நிகழ்ச்சி மூலம் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
Posted On:
28 AUG 2020 3:15PM by PIB Chennai
மத்திய மின் சக்தி, புதிய, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் துறைகளின் அமைச்சரும், மாநிலங்களின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் முகமைகள் அமைப்பின் அலுவல்சாரா புரவலருமான திரு ஆர் கே சிங், மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைகளின் கூட்டமைப்பின் (Association of Renewable Energy Agencies of States - AREAS) ஆறாவது நிறுவன நாள் விழாவில் இணையதள நிகழ்ச்சி மூலமாக 27 ஆகஸ்ட் 2020 அன்று கலந்து கொண்டார். இந்த அமைப்பின் இணையதளத்தை www.areas.org.in தொடங்கி வைத்து, தொலைபேசிக் கையேட்டையும் வெளியிட்டார்.
புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றலின் வருங்காலம் குறித்துப் பேசிய திரு சிங், இன்றைய காலகட்டத்தில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் பொருளாதார ரீதியாக சாத்தியம் என்றும், சேமித்து வைப்பது தான் கடினம் என்றும் கூறினார். காலப்போக்கில் சேமித்து வைப்பதற்கான செலவு குறையும். இதற்கான தேவையை அதிகரித்து, மேலும் அதிக அளவில் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், சேமிப்பு விலைகளை நாம் குறைக்க முடியும். அது நடைபெற்று விட்டால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றலுக்கு மாறும் போக்கு விரிவடையும். மேலும் மேலும் அதிக அளவிலான வருங்காலத் திட்டங்கள் சேமிப்புடன் கூடியதாகவே இருக்கும்.
“சேமித்து வைக்கும் வசதிகளை ஊக்குவிப்பதற்காக 24 மணி நேரமும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் இருப்பதற்கான ஆர் பி ஓ ஒன்றை நான் திட்டமிட்டுள்ளேன். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்களை எடுத்துக்கூறும் விதத்தில் விளம்பரத் தட்டிகள் வைத்தல்; வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் அளித்தல் போன்ற தகவல் தொடர்புத் திட்டங்களை மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைகளின் கூட்டமைப்பின் இயக்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கூறினார். மின்சாரத்துக்கு ஆகும் செலவினங்களைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் இவை நன்மை பயக்கும் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ ஆர் இ ஏ எஸ். அமைப்பிற்கு இதற்காக அமைச்சகம் கூடுதல் நிதி அளிக்கும். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆற்றல் பிரிவு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதத் தொடர்கள் நடத்த காலாண்டுக்கு ஒருமுறையாவது மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவற்றின் மூலம் புதுமையான தீர்வுகள் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
(Release ID: 1649278)