அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார்

Posted On: 24 AUG 2020 12:09PM by PIB Chennai

புதைபடிவ எரிபொருள் குறைந்து கொண்டு வரும் சூழலில் இந்தியாவைச் சுற்றியுள்ள மிக நீண்ட கடல்சார் சூழ்நிலையில் காணப்படும் நுண்பாசியில் இருந்து எரிபொருளை முழு அளவில் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.  கடலில் உள்ள நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலைத் தயாரிப்பது என்பது விரைவில் சாத்தியமாக உள்ளது.  பயோடீசல் உற்பத்திக்காக நுண்பாசியில் கொழுமியம் சேகரிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக உயிர்தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஒரு விஞ்ஞானியின் முயற்சியால் இது சாத்தியமாக இருக்கிறது.

பெட்ரோலியம் அடிப்படையிலான எரிபொருள் அளவு வேகமாகக் குறைந்து வருவதை உணர்ந்து தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிலையத்தின் டாக்டர் தி.மதிமணி புதுப்பிக்கக்கூடிய மற்றும் நீடித்து நிலையாக இருக்கக் கூடிய மூலப்பொருள்களில் இருந்து மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்யும் முயற்சிகளைத் தொடங்கினார். அண்மையில் பலவிதமான பயோஃபீவல் கண்டறியப்பட்டு இருந்தாலும் உயிர்எரிபொருள் உற்பத்தியில் நுண்பாசியின் பயன்பாடு மிக முக்கியமானது எனக் கருதப்படுகிறது.   பிற உயிரி எரிபொருளுக்கான மூலப்பொருள்களைக் காட்டிலும் நுண்பாசிக்கு பலவிதமான அனுகூலங்கள் இருக்கின்றன.  நீடித்த நிலையான எரிபொருளுக்கான இந்த வழிமுறை அவருக்கு உந்துதலாக அமைந்தது. 

பொருளாதார ரீதியில் பயோடீசல் உற்பத்திக்காக கடல் நுண்பாசியின் ட்ரையாசில் கிளிசரால் அளவை அதிகரிப்பதற்கான தொழில்உத்திகளை அவர் சமர்ப்பித்து இருந்தார்.  இதற்கு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை நிறுவியுள்ள ”உந்துதல் பெற்ற ஆராய்ச்சிக்கான அறிவியல் தேடலில் புத்தாக்கம்” (INSPIRE) என்ற ஆசிரியருக்கான ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது 

இந்த உதவித்தொகையின் மூலம் அவர் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கிமோஸ்பியர் என்ற விஞ்ஞான இதழில் வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இருந்து கடல் நுண்பாசியின் பிக்கோகுளோரம் எஸ்பி, குளோரல்லா எஸ்.பி, சீன்டெஸ்மஸ் எஸ்.பி ஆகிய முக்கியமான மரபணுத் தொகுதிகளை டாக்டர். தி.மதிவாணன் மற்றும் அவரின் குழுவினர் பிரித்தெடுத்துள்ளனர்.  பயோடீசல் உற்பத்திக்காக மொத்த அங்ககக் கார்பன் அளவு மற்றும் ட்ரையாசில்கிளிசரால் (TAG) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மரபணுத் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 

பன்முக உயிர்தொழில்நுட்பவியல் ஆற்றல் மற்றும் கொழுமிய பிரித்தெடுப்புத் திறன் அடிப்படையில் மாறக்கூடிய துருவமுனைக் கரைப்பான் திறன் அமைப்பு (SPS) ஆகியவற்றுக்காக பிற நுண்பாசி வகைகளையும் இந்தக் குழுவினர் இப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.  எஸ்.பி.எஸ் என்பது எந்தவொரு வெப்பம் சார்ந்த செயல் முறையில் இழக்கப்பட்டாலும் திரும்ப மீட்கக்கூடிய வகையிலான ஆற்றல்மிக்க மாறக் கூடிய கரைப்பானாக இருக்கிறது.  சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நுண்பாசிக் கொழுமிய பிரித்தெடுப்புக்கு இதனைப் பயன்படுத்தலாம்.  பயோடீசல் கிடைப்பதை அதிகப்படுத்துவதற்காக  டி.ஏ.ஜி சேகரிப்பை நுண்பாசியில் விஸ்தரிப்பதற்கு வளர்சிதைமாற்றப் பொறியியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம். நுண்பாசியில் இருந்து நீரை வெளியேற்ற பலமுறை சுழற்சிகளை மேற்கொள்வதற்கு காந்த நானோ சேர்மானம் (MNC) பயன்படுத்தப்படலாம். மேலும் இதனுடைய பதப்படுத்தப்பட்ட திசு திண்மக்கலவையை பயோடீசல் உற்பத்தியின் செலவை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதற்கு மீண்டும் பயன்படுத்தலாம். நீடித்த மற்றும் செலவு குறைவான பயோடீசல் உற்பத்திக்கான தங்களது ஆய்வில் அவர்கள் இந்த மூன்று அணுகுமுறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

இந்தக் குழுவினர் வர்த்தக ரீதியில் பயோடீசல் உற்பத்தி செய்வதற்கான வழிமுறையை உருவாக்கித் தருவார்கள். இது நீடித்த நிலையான முறையில் எரிபொருள் சந்தையில் இடம்பெறும்.   

மேலதிக விவரங்களுக்கு: mathimanit@yahoo.com

*****


(Release ID: 1648216) Visitor Counter : 186