விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அண்மைக்கால வேளாண் சந்தைச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை உள்கட்டமைப்பு வசதி நிதியத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து முதலமைச்சர்கள் மற்றும் மாநில வேளாண்மை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்
Posted On:
21 AUG 2020 8:09PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல்வாழ்வு மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் இன்று அண்மைக்கால வேளாண் சந்தைச் சீர்திருத்தங்கள் மற்றும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண்மை உள்கட்டமைப்பு வசதி நிதியத்தின் கீழ் நிதிஉதவி அளிக்கும் மத்திய அரசின் புதிய திட்டம் ஆகியன குறித்து முதலமைச்சர்கள் மற்றும் மாநில வேளாண்மை அமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்திராகண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், பீகார், இமாசலப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் வேளாண்மை அமைச்சர்கள் மற்றும் மத்திய வேளாண் இணையமைச்சர்கள் திரு புருஷோத்தம் ரூபல், திரு கைலாஷ் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 85 சதவீதமாக உள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிலான வேளாண் உள்கட்டமைப்பு வசதி நிதியத்தின் முழுப் பலன்களும் சென்று சேர்வதை உறுதி செய்யவேண்டும் என்று கலந்துரையாடலின் போது திரு.தோமர் வலியுறுத்தினார். விவசாயிகளுக்காக இவ்வளவு பெரிய தொகையை பிரதம மந்திரி ஒதுக்கி இருப்பது என்பது வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் முழுக்க முழுக்க விவசாயிகள் நல்வாழ்வைச் சார்ந்தவை என்றும் குறைந்தபட்ச ஆதார விலை பிரச்சினையால் குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை என்றும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார். முன்பு உள்ளதைப் போலவே விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை பொருள்கள் கொள்முதல் செய்வது தொடரும். ரூ.1லட்சம் கோடி நிதியை பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அனைத்து கிராமங்களிலும் புதியதாக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர்களும் மாநில வேளாண் அமைச்சர்களும் முழு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள சட்டங்களினால் விவசாயிகள் பெரிதும் பலன் அடைவர் என்று திரு தோமர் தெரிவித்தார். விவசாயிகள் – வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையிலான விவசாயமும் தொகுப்பு முறையிலான விவசாயமும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 10,000 வேளாண் உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதற்கு 6,865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 85 சதவீத சிறு வியாபாரிகள் பலன் அடைவார்கள்.
நிறைவாக மத்திய அமைச்சர் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர்கள் / அமைச்சர்களுடன் விவாதித்தார். உள்கட்டமைப்பு வசதிகளில் தற்போதுள்ள இடைவெளிகளை நிரப்பும் வகையிலான செயல் திட்டங்களை அடையாளம் காணுவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் மிக விரைவாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் உறுதி அளித்தார். விவசாயிகள் பலன்களை விரைவில் பெறுவதற்கு உதவும் வகையில் மாநிலங்களில் இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவோம் என்று முதலமைச்சர்களும் உறுதி அளித்தனர்.
(Release ID: 1647870)