மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

காணொலிக் காட்சி தீர்வை உருவாக்குவதற்கான மாபெரும் சவாலின் முடிவுகளை திரு. ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்

Posted On: 20 AUG 2020 4:37PM by PIB Chennai

காணொலிக் காட்சித் தீர்வை உருவாக்குவதற்கான மாபெரும் சவாலின் முடிவுகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் சட்டம், நீதி அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் இன்று அறிவித்தார் 

 

டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் கீழ் காணொளிக் காட்சித் தீர்வை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்புச் சவாலை மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 12 ஏப்ரல், 2020 அன்று அறிவித்தது. தொழிற்சாலைகள், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் தனிப்பட்ட நிபுணர்கள் இந்த சவாலில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடெங்கிலும் இருந்து இதற்கு பலத்த வரவேற்பு கிடைக்கப் பெற்று, மொத்தம் 1983 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. மூன்று கட்ட செயல் முறையின் (கருத்தியல், மாதிரி மற்றும் தயாரிப்பு நிலை) மூலம் இவை மதிப்பிடப்பட்டன.

 

புதுமையான காணொளிக் காட்சித் தீர்வுகளை முன்மொழிந்திருந்த 12 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதிரியை உருவாக்க தலா ரூ. 10 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் உருவாகியிருந்த மாதிரிகளை அரசின் மூத்த அதிகாரிகள், புகழ்வாய்ந்த கல்வியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறன்வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு மதிப்பிட்டு, சந்தைப்படுத்துதலுக்கு தயார் நிலையில் பொருள்களை உருவாக்கும் விதத்தில் ஐந்து விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிப்பட்டியலில் இருந்த ஐவருக்கு மேலும் ரூ. 20 லட்சம் (மூவருக்கு), ரூ.15 லட்சம் (இருவருக்கு), வழிகாட்டுதல், பரிசோதனை வசதிகள் மற்றும் தேசியத் தகவல் மைய மேகக் கணினியத்தின் நுழைவு ஆகியவை வழங்கப்பட்டன. துறையின் திறன்வாய்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட நடுவர் மற்றும் வழிகாட்டிகள் குழு பொதுநலன் கருதி சிறப்பான ஆதரவை அளித்தனர். இறுதிச்சுற்றில் இருந்த ஐந்து பேரும் தீர்வுகளை முன்மொழிந்த நிலையில், ஒவ்வொரு பொருளையும் விரிவாக ஆய்வு செய்த நடுவர் குழு வெற்றியாளர்களை அறிவித்தது.   

 

ஆலப்புழையைச் (கேரளா) சேர்ந்த டெக்ஜெண்ட்சியா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் விகான்சொல் (Vconsol) வெற்றி பெற்றதாக நடுவர் குழுவால் அறிவிக்கப்பட்டது. போட்டியின் வெற்றியாளருக்கு ரூ 1 கோடியும், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்காக கூடுதலாக ரூ 10 லட்சமும் அடுத்த மூன்று வருடங்களில் வழங்கப்பட்டு, அவர்களின் தீர்வு அரசின் பயன்பாட்டுக்காக ஒப்பந்தம் ஒன்றின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும்.

 

மேலும், மூன்று விண்ணப்பதாரர்களின் பொருள்கள் திறன் வாய்ந்த தீர்வுகளாக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் அவற்றை இன்னும் மேம்படுத்துவதற்காக ரூ.25 லட்சத்துடன் கூடிய ஒரு மேம்பாட்டு ஒப்பந்தம் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இந்த மூன்று பொருள்களும் ஒரு தொழில்நுட்பக் குழுவால் மேலும் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நான்கு தீர்வுகளும் அரசு மின்சந்தைக்கு மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்படும். இந்தத் தீர்வுகளின் விவரங்கள் வருமாறு:

 

1. சர்வ் வெப்ஸ் பிரைவேட் லிமிடெட் (சர்வ் வேவ்) - ஜெய்ப்பூர்

2. பீப்பிள்லின்க் யூனிபைடு கம்யூனிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (இன்ஸ்டா விசி) - ஹைதரபாத்

3. இன்ஸ்ட்ரிவ் சாப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஹைட்ராமீட்) - சென்னை

 

மேற்கண்ட அனைத்து காணொளிக் காட்சித் தீர்வுகளுக்கும், தரப்படுத்துதல் பரிசோதனை மற்றும் தரச்சான்றிதழ் (STQC), கணினி அவசரகால எதிர்வினைக் குழு (CERT-In), மேம்படுத்தப்பட்ட கணினிமய வளர்ச்சி மையம் (CDAC) மற்றும் தேசியத் தகவல் மையம் (NIC) ஆகியவற்றின் ஆதரவு வழங்கப்படும். அனைத்து நான்கு தீர்வுகளுக்கும் தேசியத் தகவல் மைய மேகக் கணினியத்தில் பதிவேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசு மின்சந்தை மூலம் இந்தப் பொருள்களை அரசு பயன்படுத்திக்கொள்ள தேசிய தகவல் மையம் வழிவகை செய்யும். வெற்றி பெற்ற அணி உட்பட அனைத்து அணிகளும் தங்களது பொருள்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தியும் கொள்ளலாம்.


(Release ID: 1647515) Visitor Counter : 207