ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே பாதுகாப்புக்காக ஆளில்லா வான்வழி வாகனம் (ட்ரோன்) அடிப்படையிலான கண்காணிப்பு முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது

Posted On: 18 AUG 2020 8:08PM by PIB Chennai

ஆளில்லா வான்வழி வாகனமான ட்ரோன் கண்காணிப்புத் தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்ட மனித சக்தி கொண்ட பெரிய பகுதிகளில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கு ஒரு முக்கியமான மற்றும் செலவு குறைந்த கருவியாக உருவெடுத்துள்ளது. இந்திய ரயில்வேயில் மத்திய ரயில்வேயின் மும்பைப் பிரிவு சமீபத்தில் ரயில்வே பகுதிகளில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், யார்டுகள், பட்டறைகள் போன்றவற்றில் சிறந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக இரண்டு நிஞ்ஜா ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனங்களை (ட்ரோன் - UAV) வாங்கியுள்ளது.

 

மும்பை ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) நான்கு ஊழியர்களைக் கொண்ட குழு ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனம் (ட்ரோன்) பறத்தல், கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி பெற்றுள்ளது.

 

ரயில்வே பாதுகாப்பு நோக்கத்திற்காக, இந்த ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனத்தைப் (ட்ரோன்களைப்) பயன்படுத்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) திட்டமிட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, நவீன பயிற்சித் தொழிற்சாலை, ரெய்பரேலி மற்றும் தென்மேற்கு ரயில்வே ஆகிய இடங்களில் ரூ.31.87 லட்சம் செலவில் இதுவரை ஒன்பது (09) ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனங்கள் (ட்ரோன்) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மூலம் வாங்கப்பட்டுள்ளன.

 

மேலும் எதிர்காலத்தில் ரூ.97.52 லட்சம் செலவில் மேலும் பதினேழு (17) ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனங்கள் (ட்ரோன்)  வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பது (19) ரயில்வே பாதுகாப்புப் படைப் (RPF) பணியாளர்கள் இதுவரை இந்த ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனச் (ட்ரோன்) செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி பெற்றுள்ளனர், அவர்களில் 4 பேர் இதனை இயக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளனர். மேலும் ஆறு (06) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

இந்த ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனத்தை (ட்ரோன்) பயன்படுத்துவதின் முக்கிய நோக்கம் இவை விரைவான செயல்பாடு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் செயல்திறனுக்கும் உதவுவதாகும்.

 

8-10 ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்கள் தேவைப்படும் இடத்தில், ஒரு ஆளில்லா வான்வழிக் கண்காணிப்பு வாகனத்தின் கேமரா அந்தப் பணியை எளிதில் செய்து முடிக்கும். எனவே, இது மனிதவளத்தைப் பயன்படுத்துவதில் உள்ள பற்றாக்குறையை குறைத்து கணிசமான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

 

*****


 (Release ID: 1646833) Visitor Counter : 206