ஜல்சக்தி அமைச்சகம்

தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுவதை முதல்வருடன் இணைந்து மத்திய நீர்வள அமைச்சர் ஆய்வு செய்தார்.


தமிழ்நாட்டில், 20% வீடுகளுக்குக் குழாய் இணைப்புகள் உள்ளன மற்றும் 100 லட்சம் வீடுகளுக்கு செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட இருக்கின்றன

Posted On: 18 AUG 2020 7:01PM by PIB Chennai

தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுவது குறித்து முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்து மத்திய நீர்வள அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் காணொளிக் காட்சி மூலம் இன்று ஆய்வு செய்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும், குடி தண்ணீரை வழங்க மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அனைவரையும் சென்றடைய வேண்டும், அதாவது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களது வீடுகளில் குழாய் தண்ணீர் இணைப்பை வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

 

ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து போதுமான அளவிலும் (ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 55 லிட்டர்கள்), பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும் குடி தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்குக் குழாய் இணைப்பை வழங்குவது பெண்களின், குறிப்பாக சிறுமிகளின், வேலைப்பளுவை குறைக்க உதவும். கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதையும்' இது மேம்படுத்தும்.

 

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை 2024-க்குள் 100 சதவீதம் எட்ட தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. இது வரை, தமிழகத்தில் உள்ள 126.89 லட்சம் கிராமப்புற வீடுகளில், 25.98 லட்சம் (20.45%) வீடுகளுக்குக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான குழாய் இணைப்புகளைப் பொருத்த வரையில், ஒட்டுமொத்த நாட்டில் 17-வது இடத்தில் தமிழ்நாடு தற்போது இருக்கிறது. 2020-21-ஆம் ஆண்டில் 33.94 லட்சம் வீடுகளுக்குக் குழாய் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு திட்டமிடுகிறது.

 

மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து முதல் அமைச்சருடன் மத்திய அமைச்சர் விரிவான ஆலோசனையை நடத்தினார். ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த முதல்வர் உறுதியளித்தார்.

 

ஊரக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துரைத்த மத்திய அமைச்சர், 12,523 கிராமங்களில் ஏற்கனவே இருக்கும் தண்ணீர் விநியோகத் திட்டங்களை விரிவுபடுத்துமாறும், நவீனப்படுத்துமாறும் வலியுறுத்தினார். இக்கிராமங்களில் உள்ள மிச்சமிருக்கும் வீடுகளும் குழாய் இணைப்புகளைப் பெறும் வகையில் இந்தப் பணிகளை அடுத்த 4-6 மாதங்களில் விரைந்து தொடங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இருக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் முறையின் மூலம் 55-60 லட்சம் வீடுகளுக்கு மாநிலத்தால் குழாய்த் தண்ணீர் இணைப்புகளை வழங்க முடியும். வீடுகளுக்கான சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஏற்கனவே இருக்கும் தண்ணீர் விநியோகத் திட்டங்களின் செயல்பாட்டின் மீது மாநிலம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தரம், அளவு மற்றும் தண்ணீர் விநியோகம் சீராக செய்யப்படுவதைக் கண்காணிக்க முறையான அளவு மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

 

டிசம்பர் 2020-க்குள் புளோரைடால் பாதிக்கப்பட்ட 236 குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான குடி தண்ணீரை வழங்குவதை உறுதிசெய்ய திட்டத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்யுமாறு முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆறு JE/AES பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 2,679 கிராமங்களுக்கும், வளரத்துடிக்கும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் உள்ள 879 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்த் தண்ணீர் இணைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

இந்த இலக்கை எட்டுவதற்கு அனைத்து உதவிகளையும் மாநிலத்துக்கு மத்திய அரசு செய்யும் என்னும் உறுதியை திரு. செகாவத் மீண்டுமொரு முறை அளித்தார். வழங்கப்பட்ட குழாய் இணைப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், பயன்படுத்தப்பட்ட மத்திய நிதி மற்றும் அதற்கு இணையான மாநிலப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜல் ஜீவன் இயக்கத்துக்கான நிதியை இந்திய அரசு வழங்கும். '100 சதவீதம் செயல்படும் குழாய் இணைப்புகளைக் கொண்ட வீடுகள் உள்ள மாநிலமாகதமிழ்நாட்டை மாற்றுவதற்கு தனது முழு ஆதரவையும் தமிழக முதல்வரிடம் நீர் வள அமைச்சர் தெரிவித்தார்.

 

2020-21-ஆம் ஆண்டில் ரூ 929.99 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மாநிலப் பங்கோடு சேர்த்து ரூ 2,108.07 கோடி நிதி கட்டாயம் உள்ளது. நடவடிக்கை மற்றும் நிதிச் செயல்பாட்டைப் பொருத்து கூடுதல் ஒதுக்கீட்டுக்கு மாநிலம் தகுதி பெறுகிறது. 15-வது நிதி ஆணைய மானியங்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு ரூ 3,607 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாலும், அதில் 50 சதவீதம் கட்டாயம் தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாலும், ஊரகத் தண்ணீர் விநியோகம், சாம்பல் நீர் சிகிச்சை மற்றும் மறு-பயன்பாடு, மற்றும் மிக முக்கியமாக, உறுதியான சேவை வழங்கலுக்காக தண்ணீர் விநியோகத் திட்டங்களின் நீண்டகாலச் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்ய இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வரை திரு. செகாவத் கேட்டுக் கொண்டார். நீர் ஆதாரங்களை வலுப்படுத்துதல், தண்ணீர் விநியோகம், சாம்பல் நீர் சிகிச்சை, மறு-பயன்பாடு, செயல்பாடு, பாரமரிப்புக்காக மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்), மாவட்ட கனிம வளர்ச்சி நிதி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதி ஆணைய மானியம், பெருநிறுவன சமூகப் பொறுப்புநிதி உள்ளிட்டவற்றை கிராம அளவில் சிறப்பாகப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

 

கிராமத் தண்ணீர் விநியோக உள்கட்டமைப்பைத் திட்டமிட்டு, வடிவமைத்துநிறுவி, செயல்படுத்தி, பராமரிக்க குறைந்தபட்சம் 50 சதவீதம் பெண் உறுப்பினர்களைக் கொண்ட கிராமத் தண்ணீர் மற்றும் தூய்மைக் குழுவை கிராமப் பஞ்சாயத்தின் துணைக் குழுவாக அமைக்கவும், கிராமச் செயல் திட்டங்களை வகுக்கவும் மத்திய அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். குடி தண்ணீர் ஆதாரங்களை மேம்படுத்துதல்/விரிவாக்குதல், தண்ணீர் விநியோகம், சாம்பல் நீர் மேலாண்மை மற்றும் செயல்பாட்டு, பராமரிப்புக் கூறுகளைக் கொண்ட கிராமச் செயல் திட்டங்களை அனைத்து கிராமங்களும் தயாரிக்க வேண்டும். ஐந்து நபர்களுக்கு, குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, களப் பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்த பயற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, இதன் மூலம் உள்ளூரிலேயே தண்ணீர்ப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று மாநிலத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தின் நீர் வள மேலாண்மை தொடர்பான விஷயங்கள் மற்றும் காவிரி ஆற்றின் மாசைக் களைவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.



(Release ID: 1646831) Visitor Counter : 204