குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்.

Posted On: 18 AUG 2020 1:56PM by PIB Chennai

விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த  வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஏஆர்ஐஐஏ-2020 (புதுமையான சாதனைகள் குறித்த நிறுவனங்களின் அடல் தரவரிசை) ஆன்லைன் விருதுகள் வழங்கும்  விழாவில் உரையாற்றிய திரு.நாயுடு, பதப்படுத்தும் வசதிகளை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பங்களை வழங்குதல் போன்ற  பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்பாளர்கள் கவனம் செலுத்த  வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுப்பதுடன், அவர்களது விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை  உறுதிசெய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டுவருவதில், ஏஐசிடிஇ, ஐசிஏஆர், என்ஐஆர்டி, விவசாய பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் உயர்கல்வி முறை, இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், “புதிய கண்டுபிடிப்புகள் கல்வியின் இதயத்துடிப்பாக இருக்கவேண்டும். சிறந்தவற்றுக்கான தாகம் வழிமுறையாக இருக்க வேண்டும்’’, என்று கேட்டுக்கொண்டார்.

கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் மறுகண்டுபிடிப்பு செய்து, புதுமை மற்றும் உருவாக்கத்துக்கான அத்தியாவசியச் சூழல்களை ஏற்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்திய திரு. நாயுடு, நமது கல்விச்சூழல், கேள்வி கேட்கும் உள்எழுச்சியை உருவாக்குவதுடன், புதுமையான முறையில்  பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண்பதை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை, புதுமையை ஊக்குவிக்கும் ஏராளமான பரிந்துரைகளைக் கொண்டுள்ளது பற்றி மகிழ்ச்சி வெளியிட்ட அவர், “தரமான கற்பித்தல், கற்றல் ஆகியவற்றுடன் ஆராய்ச்சியையும் விரிவாக மேம்படுத்தும் தொலைநோக்கை அது கொண்டுள்ளது’’ என்றார்.

இந்தக் கொள்கை, புரிதல், விமர்சனச் சிந்தனை, பகுப்பாய்வு, உலக அறிவின் புதிய முகங்களைக் கண்டுபிடிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு  முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், “பன்னோக்குக் கற்றல் மூலம் பல்வேறு ஒழுங்குகளை இணைப்பதுடன், குளறுபடிகளை அகற்றவும் வழிவகுக்கிறது. இந்த இணைப்பை உருவாக்குதல் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமானது ’’ என்று கூறினார்.

புதிய கண்டுபிடிப்புக் கலாச்சாரத்தைக் கற்பிக்க ஒன்றுபட்ட முயற்சி தேவை என்று வலியுறுத்திய திரு. நாயுடு, நமது மாணவர்களை சிந்தனையிலிருந்து  வெளியே வந்து, களத்தில் இறங்கி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்புகளைத் தேடுவதை விடுத்து அவற்றை உருவாக்குபவர்களாகவும்  மாற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்தத் தரவரிசையில் முன்னேறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல இந்தியாவுக்கு உயர் தரத்துடன் கூடிய மேலும் அதிக கல்வி நிறுவனங்கள் தேவை என்று கூறினார். “உலகில் சிறந்தவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வது அவசியம். ஆகச் சிறந்ததிலிருந்து சிறந்தவற்றை அடைவதை லட்சியமாக கொள்ள வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

இந்தியாவின் புதுமையான வரலாறு பிங்கலா, ஆரியபட்டா, பிரம்மகுப்தா போன்ற புகழ்பெற்ற கணித மேதைகள் பூஜ்யத்தையும், தசம முறையையும் கண்டுபிடித்தது முதல் 20 நூற்றாண்டுகள் பழமையானது என்று நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், இந்தியா ஒரு காலத்தில்  கல்வியில் உலகத்துக்கே குருவாகத் திகழ்ந்தது என்றும், தொலைதார நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க நாலாந்தா, தட்சசீலம் பல்கலைக்கழகங்களுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்.

 

***********


(Release ID: 1646716) Visitor Counter : 238