சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வ இரத்ததான முகாமை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் துவக்கி வைத்தார்

Posted On: 14 AUG 2020 1:43PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வ ரத்ததான முகாமை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இன்று துவக்கி வைத்தார்.

 

சுதந்திர நாளைட்டி எய்ம்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த முகாம் நம்நாட்டிற்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக சேவை செய்வதற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், கோவிட் முன்னணிப் போராளிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர் ஒருவரது குடும்பத்தினரும், கோவிட் நோய்க்கு எதிராக முன்னணிப் போராளியாக பணியாற்றியதால் உயிரிழந்த ஒருவரது குடும்பத்தினரும், கௌரவ விருந்தினராக முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 

இந்த முகாமில் எய்ம்ஸ் இயக்குர் டாக்டர்.ரண்தீப் குலேரியா, இதர மூத்த மருத்துவர்கள் ஆகியோருடன், ரிப்பன் வெட்டியும், விளக்கேற்றியும் முகாமை டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கி வைத்தார். இரத்த தானம் செய்தவர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் கலந்துரையாடினார். இரத்த தானத்தை ஊக்குவிக்கும் அவர்களது பணியைப் பாராட்டி அவர்களுக்கு சான்றிதழும் அமைச்சர் வழங்கினார். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் விடுதலை நாளையொட்டி பெருமளவில் தாமாகவே முன்வந்து இரத்த தானம் அளிக்கவேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இரத்ததான முகாமில் முகக்கவசங்கள், கையுறைகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முகாமில் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.

 

எய்ம்ஸ் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் நமது 73 ஆவது விடுதலை நாளைட்டி, இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது, வெள்ளைக் கோட்டு அணிந்து, கோவிட் நோயை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த போராளிகளுக்கும், கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் இது ஒரு புகழஞ்சலி. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்த தியாகத்தை நாம் நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னணி சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றிய மறைந்த திரு.ஹீராலால் குடும்பத்தினரும், கார்கிலில் உயிர்நீத்த கார்கில் ஷஹீத் லான்ஸ் நாயக் ராஜ்வீர் சிங் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.

 

 

*****


(Release ID: 1645781) Visitor Counter : 184