குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவையின் செயல்பாடு மாற்றத்துக்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது: அவைத்தலைவர் சொல்கிறார்

Posted On: 11 AUG 2020 3:58PM by PIB Chennai

ஆரம்பகால அச்சங்கள் மற்றும் தயக்கங்களுக்கு மாறாக, கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தன்னை முன்னெப்போதையும் விட இன்னும் சுறுசுறுப்புடனும், செயல்பாடுகளுடனும் வைத்திருந்ததாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. வெங்கைய நாயுடு இன்று கூறினார். மாற்றத்துக்குத் தகுந்தவாறு புதிய யதார்த்தங்களுக்கு தன்னுடைய மனதை விரைவில் பழக்கப்படுத்தியதே இதற்கு காரணம் என்று திரு. நாயுடு மேலும் கூறினார்.

 

குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் மூன்று வருடங்களைத் தான் பூர்த்தி செய்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. வெங்கைய நாயுடு, மாற்றத்துக்கான அறிகுறிகளை  மாநிலங்களவையின் செயல்பாடுகள் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், அதிக அளவிலான செயல்திறன், கடந்த சில அமர்வுகளில் அதிகரித்த சட்டப்பூர்வ வெளிப்பாடுகள் மற்றும் முதல் முறையாக மாநிலங்களவைக் குழுக்களின் கூட்டங்களில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தைக் கடந்தது ஆகியவற்றின் மூலம் இது தெரிவதாகக் கூறினார்.

 

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஒன்றில், 'இணைப்பது, தொடர்பு கொள்வது, மாற்றத்தை ஏற்படுத்துவது' என்னும் தலைப்பிலான புத்தகத்தை, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புத்தகத்தின் மின் பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். கடந்த ஒரு வருடத்தில் திரு. நாயுடுவின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைக் கொண்ட 334 படங்களுடன் கூடிய இந்த 251 பக்கப் புத்தகத்தை வெளியீடுகள் பிரிவு தயாரித்துள்ளது.

 

கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முன்னர் மாதத்துக்கு 20 நிகழ்ச்சிகள் தனக்கு இருக்குமென்றும், 70-க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகள் மற்றும் 14 பட்டமளிப்பு விழாக்களில் தான் பேசியுள்ளதாகவும் திரு. வெங்கைய நாயுடு கூறினார். கட்டுப்பாடுகளைத் தான் விரைவில் பழகிக்கொண்டதாகவும்செயல்பாடுகளுக்கான விதிகளை மாற்றியமைத்து, மக்களுடன் தொடர்பு கொள்ள தொழில்நுட்பத் தளங்களை விரிவாகப் பயன்படுத்தியதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். 1600-க்கும் மேற்பட்ட நபர்களுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசி, கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த நிலைமையைக் கண்டு அஞ்ச வேண்டாமென்றும், மாறாக, இதை சமாளிப்பதற்கு தினசரிப் பழக்கவழக்கங்களில் சிறு மாறுதல்களைச் செய்தாலே போதுமென்றும் சமூக ஊடகங்களைப் அதிக அளவில் பயன்படுத்தி மக்களுக்கு எடுத்துரைத்ததாகவும் திரு. நாயுடு தெரிவித்தார். கொரோனா வைரசைப் பற்றிய உண்மைகள், அதன் பரவல், கோவிட் பெருந்தொற்று, அதை எதிர்கொள்ளும் வழிகள் மற்றும் பல்வேறு இதர கட்டுரைகள் என 350 சுட்டிகள் மற்றும் 55 முகநூல் பதிவுகள் மக்களைத் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன. "தொடர்பு கொள்ளும் இயக்கம்" பெரிதும் பலனளித்ததாக திரு. நாயுடு தெரிவித்தார்.

 

ஆகஸ்ட் 11, 2017 அன்று தான் பதவியேற்றது முதல், கடந்த மூன்று வருடங்களாக மாநிலங்களவையின் செயல்பாட்டைப் பற்றி பேசிய திரு நாயுடு, மாற்றத்துக்கான அறிகுறிகள் என்று தான் குறிப்பட்டதற்கான ஆதாரத்தை அளித்தார். தான் பொறுப்பேற்றக் கொண்ட பிறகு ஒரு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வைத் தொடங்க உத்தரவிட்டதாகவும், கடந்த 25 வருடங்களாக அவையின் செயல்திறன் குறைந்து கொண்டே வந்தது அதில் தெரிய வந்ததாகவும் திரு. நாயுடு கூறினார். கடந்த 20 வருடங்களில் 1999-இல் ஒரே ஒரு முறை தான் 100 சதவீத உறுப்பினர் வருகையை அவை கண்டது.

 

அவையின் மூன்று கூட்டத் தொடர்களின் செயல்பாடுகளை தேர்தல் ஆண்டு கடுமையாக பாதித்த போதிலும், கடந்த மூன்று வருடங்களில் தான் தலைமை வகித்த எட்டுக் கூட்டத் தொடர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் 65.50 சதவீதமாக இருந்ததாக திரு. நாயுடு கூறினார். மாநிலங்களவையின் செயல்திறன் 248-வது கூட்டத் தொடரில் வெறும் 28.90 சதவீதமாக இருந்ததாகவும், 247-வது கூட்டத் தொடரில் 27.30 சதவீதமாக இருந்ததாகவும், மற்றும் மிகவும் குறைவாக 248-வது கூட்டத் தொடரில் வெறும் 6.80 சதவீதமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மாநிலங்களவையின் வருடாந்திர செயல்திறன் மிகக் குறைந்த அளவில் 35.75 சதவீதமாக இருந்ததாக அவர் கூறினார்.



(Release ID: 1645099) Visitor Counter : 284