வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் 51-வது கூட்டம்
Posted On:
07 AUG 2020 7:05PM by PIB Chennai
பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் இயங்கும் மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் ( சிஎஸ்எம்சி) 51-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைச் செயலர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா, “பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்) குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 60 லட்சம் வீடுகள் என்ற இலக்கை அடைய மாநிலங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், 2020-க்குள் இதை 80 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ என்றார். குறைந்த விலை வாடகை வீட்டு வளாகத் திட்டத்தை சிறந்த முறையில் அமல்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19 தொற்றுக் காலத்தில் நடைபெறும் முதலாவது சிஎஸ்எம்சி கூட்டமாகும் இது. ‘அனைவருக்கும் வீடு’ என்னும் தொலை நோக்கை அடிப்படையாகக் கொண்டு, 2022-க்குள் நகர்ப்புறத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உறுதியான வீடுகள் கட்டித்தரும் அரசின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலத்திற்குள், வீடுகளைக் கட்டும் பணியை நாடு முழுவதும் நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களின் 1589 கருத்துருக்கள் பரிசீலிக்கப்பட்டு, சுமார் 10.28 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பயனாளிகள் கட்டுமானம் மற்றும் குறைந்தவிலை வீட்டுவசதிக் கூட்டாண்மை மூலம் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நில விவகாரம், இடவியல் பிரச்சினைகள், நகரங்களுக்கு இடையே இடப்பெயர்ச்சி, முன்னுரிமை மாற்றம், உயிர் இழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தடங்கலாகியுள்ள திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் கேட்டுக்கொண்டன.
இத்துடன், இந்த நாள் வரை, பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ். அனுமதிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 1.06 கோடி. கோரிக்கை வைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1.12 கோடி.
சுமார் 67 லட்சம் வீடுகளுக்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டு, 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு , குடியேற்றம் நடந்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.6.31 லட்சம் கோடி. இதில் மத்திய உதவி 1.67 லட்சம் கோடி. இதில், ரூ.72,646 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (நகர்ப்புறம்) , துணைத் திட்டமான நகர்ப்புற இடம் பெயர்ந்தோர், ஏழைகளுக்கான, குறைந்த விலை வாடகை வீட்டு வளாகத் திட்டத்திற்கு, மாநிலங்களிடமிருந்து பெரும் வரவேற்பு காணப்பட்டது. இத்திட்டம் குறித்து, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விளக்கப்பட்டு, இதைச் சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. குறைந்த விலை வாடகை வீட்டு வளாகத் திட்டம் ‘ தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் குறிக்கோளை நோக்கிய , முக்கியமான படியாகும்.
****
(Release ID: 1644213)
Visitor Counter : 261