குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு மற்ற நாடுகளுக்கு குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்

Posted On: 06 AUG 2020 1:15PM by PIB Chennai

அண்டைநாடுகள் உள்ளிட்டு, மற்ற நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இன்று அறிவுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370வது பிரிவு நீக்கம் என்ற முடிவானது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பொதுவான நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் முதலாவது நினைவு தினத்தை ஒட்டி பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த திருமதி. சுஷ்மா சுவராஜ் முதலாவது நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய குடியரசுத் துணைத்தலைவர், இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றி வரும் ஒரு நாடு; 370வது பிரிவை அகற்றுவது என்ற முடிவு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

மற்ற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதற்குப் பதிலாக தங்களது சொந்த நாட்டு விஷயங்களில் இதர நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு. நாயுடு கேட்டுக் கொண்டார்.

இறப்பதற்கு முன்பாக திருமதி. சுஷ்மா சுவராஜ் 370வது பிரிவு குறித்து வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் இந்தியாவின் நிலைபாட்டை மிகவும் திறமையோடு அவர் வெளிப்படுத்தி வந்ததோடு, அவற்றை மிகுந்த இனிமையோடும், மென்மையோடும் வெளிப்படுத்தினார் என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் நாடு மேற்கொண்டுள்ள நிலைபாட்டை மிகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துவதும் அவரது வழக்கமாக இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு புகழாரம் சூட்டிய அவர், முன் உதாரணமானதொரு இந்தியப் பெண் ஆகவும் அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார். தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்துச் சென்ற திறமையானதொரு நிர்வாகியாகவும் அவர் விளங்கினார்.

இளம் அரசியல்வாதிகள் அவரை முன் உதாரணமாகக் கொண்டு அவரது தனித்தன்மைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு. நாயுடு மேலும் கூறுகையில் திருமதி. சுஷ்மா ஜி மிகவும் அருமையானதொரு மனிதராக, கனிவானவராக, நண்பர்கள், ஆதரவாளர்கள் அல்லது பொதுமக்கள் என எவரிடமிருந்தும் வரும் எந்தவொரு கோரிக்கைக்கும் உடனடியாக பதிலளிப்பவராக விளங்கினார் என்றும் குறிப்பிட்டார்.

திருமதி. சுவராஜ் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் 1996ஆம் ஆண்டில் மக்களவையில் நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது  ‘இந்தியத் தன்மை’ என்பது குறித்து மிகச் சிறப்பாக உரையாற்றியதையும் நினைவு கூர்ந்தார். பேசும் மொழியின் தூய்மை, தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், தெளிவான சிந்தனை ஆகிய அனைத்துமே அனைவராலும் போற்றப்பட்ட பேச்சாளராக அவரை உருவாக்கியது.

உணர்ச்சிபூர்வமானதொரு தேசியவாதியாகத் திகழ்ந்த அவர் தனது கருத்துக்களை எவ்வித ஒளிவு மறைவுமின்றி எப்போதும் வெளிப்படுத்தியவர் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

*****



(Release ID: 1643778) Visitor Counter : 147