ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் லட்சிய நோக்குத் திட்டம்: தூய்மையான நீர் மற்றும் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ள திட்டம்

Posted On: 05 AUG 2020 4:08PM by PIB Chennai

மேற்குவங்க மாநிலத்தில் ஜல் ஜீவன் லட்சிய நோக்குத் திட்டத்தை அமல் செய்வதற்கான வருடாந்திர செயல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்கு மேற்குவங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 1.63 கோடி கிராமப்புற வீடுகளில், 2.19 லட்சம் வீடுகளில் மட்டுமே குழாய் இணைப்பு மூலம் குடிநீர் கிடைக்கிறது. 2020-21ஆம் ஆண்டில் 55.60 லட்சம் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு கொடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இத் திட்டத்தை அமல்படுத்த மேற்குவங்க அரசிடம் போதிய நிதி ஆதாரம் இருக்கிறது. 2019-20ஆம் ஆண்டில் மாநிலத்துக்கு ரூ.993.88 கோடி மத்திய நிதி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் ரூ.428.37 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீதித் தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், ஆர்சனிக் மற்றும் புளோரைடு பாதிப்பு உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு ரூ. 1,305.70 கோடி அளிக்கப்பட்டது. அதில் ரூ.573.36 கோடி செலவிடப்படாமல் உள்ளது. அந்த வகையில் 1.4.2020 தேதி நிலவரத்தின்படி, கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கு மத்திய அரசின் பங்களிப்பாக மாநில அரசிடம் ரூ. 1,146.58 கோடி உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், நிதி ஒதுக்கீடு ரூ. 1,610.76 கோடியாக அதிகரிக்கப்பட்டது. தொடக்க நிலுவை ரூ. 1,146.58 கோடியுடன், சேர்த்து மாநில அரசிடம் ரூ. 2,760.76 கோடி மத்திய நிதி உள்ளது. எனவே 2020-21இல் மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்தால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்குவங்கத்தில் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்கு ரூ. 5,770 கோடி இருக்கும்.

மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 41,357 கிராமங்களில், 22,155 கிராமங்களுக்கு (54%) ஏற்கெனவே குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள கிராமங்கள் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளாக உள்ளன. இந்தக் கிராமங்களில் 1.08 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் தருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

-----



(Release ID: 1643660) Visitor Counter : 124