நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

விவசாயிகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் தாராளமயமாக்கப்பட்டுள்ள நிலையில் சுயசார்பு இந்தியா இலக்கை நிறைவேற்றும் வகையிலான உத்திகளுக்கான யோசனைகளை கொண்டு வருவதற்கான பணிமனை; உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்பாடு.

Posted On: 01 AUG 2020 7:41PM by PIB Chennai

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்-1955-இல் கொண்டு வரப்பட்ட திருத்தம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான தொழில் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதிகள்) அவசரச் சட்டம் 2020, விலை உறுதியளிப்பில் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) உடன்பாடு மற்றும் விவசாய சேவைகளுக்கான அவசரச் சட்டம் 2020 ஆகியவற்றை இயற்றியது போன்ற அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்த பணிமனைக்கு புதுதில்லியில் ஜூலை 30, 2020-இல் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்பாடு செய்தது.

நீண்டகால அடிப்படையில், சுயசார்பு இந்தியா இலக்கை நிறைவேற்றும் வகையில், உத்திகளை வகுப்பதற்கான யோசனைகளை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பணிமனை நடத்தப்பட்டது. இது, விவசாயிகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளைத் தாராளமயமாக்கியது, விவசாய விளைபொருள்களை மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் வர்த்தகம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியது, பதப்படுத்துவோர், பொருள்களை வாங்குவோர், ஒட்டுமொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள விவசாயிகளை மேம்படுத்தியது ஆகிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள சூழலின் அடிப்படையில் யோசனைகளை கொண்டு வருவதற்காக நடத்தப்பட்டது.

இந்தப் பணிமனையில் பேசிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு.சுதான்சு பாண்டே, தலைவர்களின் கனவை நனவாக மாற்ற நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி விவாதம் நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதாவது, சேமிப்புக் கிடங்குகள் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (WDRA) சேமிப்புக் கிடங்குகளை பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது, வேளாண் பொருள்களை வர்த்தகம் செய்வதற்காக ஒருங்கிணைந்த தளங்களை ஏற்படுத்துவது, வேளாண் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற வேளாண் கவுன்சிலை ஏற்படுத்துவது, குளிரூட்டி சேமிப்பு வசதிகளை ஏற்படுத்துவது, நீண்டதூரப் போக்குவரத்து மற்றும் விளைநிலங்களிலிருந்து பொருள்களை எடுத்துச் செல்வது ஆகியவற்றில் முதலீடு செய்வது போன்ற யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.


 



(Release ID: 1643023) Visitor Counter : 156