நிதி அமைச்சகம்

தொழில் துறையினரின் கடன் மறு சீரமைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் அரசு ஆலோசனை: நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்

Posted On: 31 JUL 2020 4:34PM by PIB Chennai

தொழில் துறையினரின்  கடன் சீரமைப்புக்கான தேவை குறித்து இந்திய ரிசர்வ் வங்கியுடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். இந்திய தொழில் வர்த்கச சபைகளின் கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry - FICCI) தேசிய அளவிலான செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய திருமதி சீதாராமன், ``கடன் மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது. கொள்கையளவில், கடன் மறுசீரமைப்புக்கான தேவை உள்ளது என்ற சிந்தனையை அரசு  ஏற்றுக் கொண்டுள்ளது'' என்று கூறினார்.

அரசு அறிவித்த சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆலோசனைகளை விவரித்த திருமதி. சீதாராமன், ``அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும், தொடர்புடைய துறையினருடன் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டன. எந்த நடவடிக்கையும் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் இவை மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் தேவையான ஈட்டுறுதி மாற்றங்கள் எதையும் நாம் செய்யவில்லை. அடிப்படை நிலையில் தாக்கம் உணரப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகளை நாம் எடுத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

அரசு அறிவித்த அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன்கள் வாங்கிய எம்.எஸ்.எம்.இ.கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து, சம்மேளனத்தின் உறுப்பினர்கள் முன்வைத்த விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், ``அவசரகால கடன் வசதியின் கீழ் தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுக்க முடியாது. அவ்வாறு மறுக்கப்பட்டால், அதுபற்றி தகவல் தெரிவியுங்கள். நான் அதை கவனிக்கிறேன்'' என்று கூறினார்.

தொழில் துறையில் எழும் கடன் தேவைச் சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு மேம்பாட்டு நிதி நிறுவனம் உருவாக்கலாம் என்று சம்மேளனத்தின் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அமைச்சர், ``அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அது எப்படி அமையப் போகிறது என்பது கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும்'' என்று கூறினார்.

பரஸ்பர வர்த்தக பேரங்களுக்கான தேவை பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், ``நமது சந்தைகளில் அனுமதித்துள்ள நாடுகளில் பரஸ்பர ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நமது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், பரஸ்பர பேரம் என்ற அம்சம் மிகவும் முக்கியமானதாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

சுகாதாரச் சேவை மற்றும் இதர துறைகளின் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி.யைக் குறைப்பது பற்றி, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

கடன் திருப்பிச் செலுத்தும் கெடுவை தள்ளி வைத்தல் அல்லது மறுசீரமைப்பு செய்தல் குறித்து விருந்தோம்பல் துறையிடம் இருந்து வந்துள்ள கோரிக்கைகள் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கியுடன் நிதியமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது என்று திருமதி சீதாராமன் தெரிவித்தார். ``கடன் தவணை திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை நீட்டிப்பது அல்லது கடனை மறுசீரமைப்பு செய்வது என்ற விருந்தோம்பல் துறையின் தேவைகள் எனக்குப் புரிகிறது. இதுகுறித்து நாங்கள் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து வருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

 

*****



(Release ID: 1642624) Visitor Counter : 297