வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

மூங்கில் பொருள்களைத் தயாரித்தல், தனிப்பட்ட பிராண்ட் ஏற்படுத்துதல், விற்பனைக்கு ஏற்றவகையில் நேர்த்தியான முறையில் அவற்றை பேக்கேஜிங் செய்தல், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவற்றை விற்பனை செய்யும் வகையில் அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான திறன்களை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு மையங்கள் செயல்பட வேண்டும்:டாக்டர்.ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2020 5:17PM by PIB Chennai

வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) மத்திய இணை அமைச்சர், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுமின் துறை, விண்வெளி ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் டாக்டர்..ஜிதேந்திர சிங், மூங்கில் பொருள்களை முழுமையான அளவில் பயன்படுத்தி, அவற்றிலிருந்து பொருள்களைத் தயாரித்தல், தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு தனிப்பட்ட பிராண்ட் கொடுத்தல், விற்பனைக்கு ஏற்றவகையில் நேர்த்தியான முறையில் அவற்றை பேக்கேஜிங் செய்தல், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் வகையில் அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக தொழில்சார் பயிற்சி மையங்களையும், திறன் மேம்பாட்டு மையங்களையும் அமைப்பது குறித்துக் கண்டறிய வேண்டுமென்று பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தை (சி பி டி சி) வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனைக் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்த அமைச்சர், தேசிய மூங்கில் இயக்கத்துடன் சி பி டி சி இணைந்து செயல்பட்டு, வடகிழக்கு மண்டலத்தில் மூங்கில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார். புதிதாகத் தொழில் துவங்கும் அமைப்புகள் மூலம் மூங்கில் தொழில்துறைக்கு திறன் மேம்பாட்டு மையங்கள் ஊக்கமளிக்கும் என்றும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் இம்மையங்கள் உதவும் என்றும் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார்.

 

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட மூங்கில் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை; மூங்கில் பொருள்கள் மீதான இறக்குமதித் தீர்வையை 25 சதவிகிதம் அதிகரித்தது ஆகிய மத்திய அரசின் முடிவுகளை வரவேற்றுப் பேசிய அமைச்சர், அகர்பத்தி தயாரிப்பது உட்பட உள்நாட்டில் மூங்கில் தொழில்துறை மிகப்பெரிய அளவில் முன்னேறுவதற்கு, இந்த நடவடிக்கைகள் உதவும் என்று கூறினார்.

 

சுற்றுச்சூழல், மருத்துவம், காகிதம், கட்டிடப் பிரிவு ஆகிய துறைகளில் இந்தியாவில் முக்கிய தூணாக மூங்கில் துறை விளங்க முடியும் என்று டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார். வடகிழக்கு மண்டலத்தில் வீடுகட்டும் திட்டங்களில், பெருமளவில் மூங்கில் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு மத்திய வேளாண் அமைச்சகம் எழுதியுள்ள கடிதம் குறித்து டாக்டர்.ஜிதேந்திர சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

 

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பத்து வகையான மூங்கில்கள் அடையாளம் காணப்பட்டுள்ள என்றும், மிக அதிக அளவில் இந்தப் புதிய வகைகளை மாநிலங்கள் பயிரிடும் என்றும் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார். அகர்பத்தி தொழில்துறையில் அதிகமாக பயன்படும், மோசோ மூங்கில் பயிர் வளர்ப்பதற்கு, தகுந்த இடமாக அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மிசோரம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். மற்ற அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து, மூங்கில் பயன்பாடு குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறும், மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை விரைவில் கண்டறியுமாறும் வடகிழக்கு மேம்பாட்டு நிதிக்கழக நிறுவனத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

                                      *******


(வெளியீட்டு அடையாள எண்: 1642520) வருகையாளர் எண்ணிக்கை : 192
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Manipuri , Punjabi