உள்துறை அமைச்சகம்
3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் , கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மேலும் பல நடவடிக்கைகளுக்கு அனுமதி
Posted On:
29 JUL 2020 7:23PM by PIB Chennai
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மேலும் பல நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து , மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டது. 2020 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும், 3-ம் கட்ட தளர்வுகளில், மேலும் பல செயல்பாடுகள் படிப்படியாக மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளின்படி, இன்று புதிய வழிகாட்டு நெறிமுறைகள், வெளியிடப்பட்டுள்ளன.
- இரவு நேரங்களில் தனிநபர் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ( இரவு நேர ஊரடங்கு) ரத்து செய்யப்படுகின்றன.
- ஆகஸ்ட் 5-ம் தேதி முதல், யோகா பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதிக்கப்படும். அங்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தனியாக வெளியிடும்.
- சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை , சமூக இடைவெளி மற்றும் இதர சுகாதார விதிமுறைகளை, உதாரணமாக, முகக்கவசங்களை அணிதல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றி நடத்த அனுமதி உண்டு. இந்த விஷயத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் 21.07.2020 வெளியிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவேண்டும்.
- மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுடன் நடத்திய விரிவான ஆலோசனை அடிப்படையில், 2020 ஆகஸ்ட் 31-ம் தேதி முடிய பள்ளி, கல்லூரி, பயிற்சி நிலையங்கள் மூடியிருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், சர்வதேச விமானப் பயணம் மேற்கொள்ள பயணிகள் குறைந்த அளவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும்.
- கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே, பின்வருபவற்றை தவிர அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்;
- மெட்ரோ ரயில்
- சினிமா திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், நாடக அரங்குகள், மதுபான விடுதிகள், ஆடிட்டோரியங்கள், கூட்ட அரங்குகள் மற்றும் அதே போன்ற இடங்கள்.
- சமூக/அரசியல்/விளையாட்டு/கேளிக்கை/கல்வி/கலாச்சாரம்/மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகள்.
இவற்றைத் திறப்பது பற்றி, சூழ்நிலையை மதிப்பிட்ட பின்னர் தனியாக முடிவு செய்யப்படும்.
- கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 2020 ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கண்டிப்புடன் தொடர்ந்து அமல்படுத்தப்படும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் விதிமுறைகளை கருத்தில் கொண்ட பின்னர், கோவிட்-19 பரவலைத் தடுக்கும் விதத்தில், மாநிலம்/யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கவனத்துடன் வரையறுக்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில், கடுமையான சுற்றளவு கட்டுப்பாட்டை பராமரிப்பதுடன், அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- கட்டுப்பாட்டுப் பகுதிகளின் விவரங்களை, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளங்களில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வெளியிட்டு, மத்திய சுகாதாரம் மட்டும் குடும்பநல அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவடிக்கைகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய மண்டலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
- கட்டுப்பாட்டு மண்டலங்கள் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளதா, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மத்திய சுகாதாரம் மட்டும் குடும்பநல அமைச்சகம் கண்காணிக்கும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் , நிலமையை மதிப்பிட்டு தடை செய்யலாம் அல்லது தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இருப்பினும், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கூடாது. இத்தகைய போக்குவரத்துக்கு தனியாக அனுமதியோ, இ-பாசோ பெறத்தேவையில்லை.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு தழுவிய உத்தரவுகள், சமூக இடைவெளி விதிமுறைகளுடன் பின்பற்றப்பட வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையே போதிய சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். தேசிய அளவிலான உத்தரவுகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும்.
நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசியத் தேவைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைக்காகவோ தவிர வெளியில் வராமல், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆரோக்கிய சேது கைபேசி செயலி பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு & விதிமுறைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1642259
*****
(Release ID: 1642335)
Visitor Counter : 463