பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப் படையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டன
Posted On:
29 JUL 2020 7:48PM by PIB Chennai
இந்திய விமானப்படைக்கு முதல் 5 ரஃபேல் விமானங்கள் அம்பாலில் உள்ள விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தன. இந்த விமானங்கள் 27 ஜுலை 2020 அன்று காலை பிரான்ஸ் நாட்டின் மேரிங்நாக் இடத்தில் உள்ள டஸ்ஸவுல்ட் விமான தளத்தில் இருந்து வான்வழியாகப் புறப்பட்டு இன்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தன. ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏஐ தாப்ரா விமானப்படைத் தளத்தில் இடைநின்று வந்தன.
இரண்டு கட்டமாகத் திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தில் ரஃபேல் விமானத்தை ஐஏஎஃப் விமானிகள் இயக்கினர். பிரான்சில் இருந்து இந்தியா வந்து சேர இந்த விமானங்கள் 8500கி.மீட்டர் தூரம் பயணம் செய்து உள்ளன. முதல் கட்ட பயண தூரமான 5800 கி.மீட்டரை ஏழரை மணி நேரத்தில் கடந்தன. வான்வழிப் பயணத்தில் வானத்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் பணியை பிரத்யேக பிரெஞ்சு விமானப்படை டேங்கர் வழங்கியது. 2700 கி.மீ தூரம் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பயணத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை ஐஏஎஃப் டேங்கர் மேற்கொண்டது. பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் தொழில்துறையினருக்கு சரியான நேரத்தில் விமானங்களை விநியோகம் செய்ததற்காக ஐஏஎஃப் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தது. மேலும் வான்வழிப் பயணத்தின் போது பிரெஞ்சு விமானப்படை டேங்கர் உதவியை வழங்கியது என்பது மிகவும் முக்கியமானது ஆகும். நீண்ட தூர விமானப் பயணம் வெற்றிகரமாக அமைய அதிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பயணம் அமைய இது உதவியாக இருந்தது.
விமானப் படையில் 10 செப்டம்பர் 2019ல் மீண்டும் உருவாக்கப்பட்ட “கோல்டன் ஏரோஸ்” என்ற 17ஆவது அணியின் ஒரு பகுதியாக இந்த விமானங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. அம்பாலாவின் விமானப்படை தளத்தில் 1, அக்டோபர் 1951ல் இந்த அணி உருவாக்கப்பட்டது. இந்த 17வது அணியானது முதல் முதலில் என்ற சாதனைகள் பலவற்றைப் புரிந்துள்ளது. இந்த அணியில் 1955ல் முதல் ஜெட் போர் விமானம் என புகழ்பெற்ற தெ ஹவ்விலாந்த் வாம்ப்பையர் சேர்க்கப்பட்டது. ஸ்வெப்ட் விங் போர் விமானங்கள் அதாவது ஹாவ்க்கர் ஹண்டர் என்ற விமானங்கள் கொண்ட முதல் அணியாக இது ஆகஸ்ட் 1957ல் மாற்றப்பட்டது.
இந்த 17வது அணியில் ரஃபேல் விமானங்களை முறைப்படியாக சேர்ப்பதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 2020 இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.
*****
(Release ID: 1642306)
Visitor Counter : 254