சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், போதையின் காரணமாக ஏற்படும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகளை கொண்ட புத்தகம் ஒன்றை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்
Posted On:
29 JUL 2020 4:47PM by PIB Chennai
போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை சீர் செய்வதற்கான சிகிச்சை விதிமுறைகள் பற்றிய மின்நூல் ஒன்றை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் இன்று காணொளி மாநாட்டின் மூலம் வெளியிட்டார். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தை நிறுத்தச் செய்வது, போதை மருந்துக்கு அடிமையாகும் நடத்தையை சீராக்குவது போன்றவற்றுக்கான சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உடனிருந்தார்.
போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் கோளாறு என்பது பொது சுகாதாரப் பிரச்சினையாக -- குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரின் பிரச்சினையாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு.அஸ்வினி குமார், “உலகம் நவீன வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் இதுபோன்ற பிரச்சினைகள் மிக அதிகமாக உள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் போக்கின் காரணமாக தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. இதை கோவிட் பொதுமுடக்கக் காலத்தின் போது நாம் பார்த்தோம்” என்று கூறினார். சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வரும் போதை மருந்துப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான திட்டம் (Drug Deaddiction Program - DDAP) மற்றும் இது போன்ற பல்வேறு முயற்சிகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி வரும் இதர பங்குதாரர்களின் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
போதை மருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலைப் போக்குவரத்து விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மன நோய் போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து டாக்டர் ஹர்ஷ்வர்தன் உரையாற்றினார். சூதாடுதல், பொருள்கள் வாங்குதல், கணினி மூலமாக தகாத தொடர்பு கொள்ளுதல், கணினி மூலமாக உடலுறவு சம்பந்தப்பட்ட கவர்ந்திழுக்கும் விஷயங்களைப் பார்த்தல், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கும் உறவுகளுடன் அளவுக்கு அதிகமான தொடர்பு கொள்ளுதல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு போதை தரும் பழக்கங்களிலிருந்தும் விடுபட சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறித்து டாக்டர் ஹர்ஷ்வர்தன் திருப்தி தெரிவித்தார்.
கோவிட் காலத்தின்போது போதைப் பழக்கம் தொடர்பான சவால்களைச் சமாளிப்பது மிகவும் முக்கியம் என்று கூறிய டாக்டர் ஹர்ஷவர்தன் உலக போதை மருந்து தொடர்பான அறிக்கை 2020 “உலகில் முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலங்களின் போது, போதை மருந்து பயன்படுத்துபவர்கள் மலிவு விலையில் கிடைக்கும் போதைப் பொருள்களை நாடுவது; ஊசி மூலம் போதை மருந்து செலுத்தி கொள்வது; பொருளாதாரச் சரிவின் காரணமாக ஏழை எளிய மக்கள் போதை மருந்துக்கு அடிமையாவது; அதனால் ஏற்படும் பாதிப்புகளால் அல்லல்படுவது போன்றவை ஏற்படும்” என்று கூறியுள்ளதாகக் குறிப்பிட்டார். புகை பிடிப்பதால் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது என்றும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மேலும் மோசமடைய, இந்தப் பழக்கம் காரணமாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல் குடிப்பழக்கமும் கோவிட் நோயால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது உட்பட பல தீய பக்கவிளைவுகளை இப்பழக்கம் ஏற்படுத்துகிறது என்றும் அமைச்சர் கூறினார். பிற போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாகவும், இதே போன்ற தீய விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
*****
(Release ID: 1642234)
Visitor Counter : 4378