குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தாய் மொழியில் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Posted On: 24 JUL 2020 7:00PM by PIB Chennai

கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையையும், மதிப்பு முறைகளையும் பற்றி விரிவாகப் புரிந்து கொள்வதற்காக, பிற மொழிகளை மக்கள் கற்கவேண்டும்; ஆனால் அதே சமயம் ஒவ்வொருவரும் தனது தாய் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பிறமொழிகளைக் கற்பதன் மூலமாக பல்வேறு வாய்ப்புகள் கிடைப்பது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மனிதர்களிடையே மேலும் அதிகமான பிணைப்பு ஏற்பட உதவும் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலகத் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்றவர்களிடையே இணைய வழியாக உரையாற்றிய திரு.வெங்கையா நாயுடு, மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி மட்டுமல்ல; அதற்கும் அப்பாற்பட்டது என்று கூறினார். வெகு நீண்ட காலமாக நிலவும் கலாச்சாரம் மற்றும் மதிப்பு முறைகளின் வெளிப்பாடு, மொழி என்று அவர் விவரித்தார். அந்தந்த மொழிகள், அந்தந்த கலாச்சாரத்தின் ஆளுமைத் தன்மையின் சுருக்கமாகும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு மொழியும் பல காலங்களாக பிற மொழிகளுடன் கலந்து பரிணாம வளர்ச்சியுற்று ஒரு மொழியாக உருவாகிறது என்று அவர் கூறினார்.

வ்வொரு நாகரீகமும் வரலாற்று, சமூக, பொருளாதார, உடல்ரீதியான விஷயங்களை மொழிகள் மூலமாக வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.“ ‘நீங்கள் யார்?’ என்ற அடிப்படைக் கேள்விக்கான பதிலை, ஒருவரது மொழியேளித்து விடுகிறது. அதாவது, ஒருவரது மொழி, அவரது கலாச்சாரத்தின், மதிப்பு முறைகளின் வெளிப்பாடாக அமைகிறது. மொழியே ஒரு மனிதனின் அடையாளத்திற்கான முதன்மையான ஆதாரம். எனவே அது மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

தாய், தாய்நாடு, தாய்மொழி, ஆசான் ஆகிய நான்கு விஷயங்களுக்கு மக்கள் எப்போதும் மிகுந்த மரியாதை அளிக்க வேண்டும் என்றும் திரு.வெங்கையாநாயுடு வலியுறுத்தினார். “தனிமனித முக்திக்கு மதம் பாதையாக உள்ளது; அந்த இலக்கை நோக்கிய வாழ்க்கைப் பயணத்திற்கு வழிகாட்டியாக கலாச்சாரம் உள்ளது. மொழி, கலாச்சாரத்தின் உள்ளார்ந்த அம்சமாகும். ஒருவரது வாழ்க்கையை நெறிப்படுத்துவதில், மொழி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஞானிகளும், தத்துவவாதிகளும் இதனால் தான் எப்போதும் சரியான வார்த்தைகளையும், சரியான மொழியையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதனால்தான் நான் கூறுகிறேன் நீங்கள் எந்த மொழியோ, அதுவே நீங்கள். நீங்கள் எதுவோ, அதுவே உங்கள் மொழி’” என்று அவர் கூறினார்.

****
 


(Release ID: 1641071) Visitor Counter : 278