நிதி அமைச்சகம்

ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் தலைமை வங்கி ஆளுநர்களின் 3-வது கூட்டத்தில் கலந்து கொண்டார் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன்.

Posted On: 18 JUL 2020 9:21PM by PIB Chennai

சவூதி அரேபியா தலைமையில் இன்று நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் தலைமை வங்கி ஆளுநர்களின் 3-வது கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். இதில், கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் சர்வதேசப் பொருளாதார நிலவரம் மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் நிதி நடவடிக்கைகளுக்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முதல் அமர்வில் பேசிய நிதியமைச்சர், ஏப்ரல் 15, 2020-இல் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் தலைமை வங்கி ஆளுநர்களின் முந்தைய கூட்டத்தில், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள வகுக்கப்பட்ட ஜி20 செயல்திட்டம் குறித்து எடுத்துரைத்தார். இந்த ஜி20 செயல்திட்டத்தில், பெருந்தொற்றுக்கு எதிராக போராட ஜி20 நாடுகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு, சுகாதார நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், வலுவான மற்றும் நீடித்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் கீழ், ஒருங்கிணைந்த வாக்குறுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தை தொடர்ந்து வலுவான முறையில் செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்று திருமதி.சீத்தாராமன் எடுத்துரைத்தார்.  

இந்த செயல்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் தனது கண்ணோட்டத்தை திருமதி சீத்தாராமன் பகிர்ந்து கொண்டார். நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான உத்திகளால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காக சர்வதேச ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் ஒவ்வொரு நாடும் தங்களது விநியோம் மற்றும் தேவை நடவடிக்கைகளை சரிசமமாக இருக்கச் செய்ய எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் செயல் திட்டம் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சமநிலையை ஏற்படுத்த, அதிகப் பணப்புழக்கம் இருக்கும் வகையிலான கடன் திட்டங்கள், நேரடி மானியப் பரிமாற்றங்கள், வேலைவாய்ப்பு உத்தரவாதத்திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளதை மற்ற நிதியமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டார். பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவான, 295 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான அளவுக்கு ஒருங்கிணைந்த பொருளாதாரத் தொகுப்பை அறிவித்ததை நிதியமைச்சர் குறிப்பாக எடுத்துரைத்தார். பொருளாதாரச் சூழல் அடிப்படையில், தர மதிப்பீட்டு அமைப்புகள், தர மதிப்பீட்டை குறைப்பது மற்றும் இதனால், நாடுகள், குறிப்பாக வளரும் பொருளாதார நாடுகளுக்கு கொள்கை முடிவெடுப்பதில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் திருமதி.சீத்தாராமன் பேசினார்.

கூட்டத்தின் இரண்டாவது அமர்வில், சவூதி அரேபியாவின் தலைமையின் கீழ், ஜி20 நிதி செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் தலைமை வங்கி ஆளுநர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய திருமதி.சீத்தாராமன், இரண்டு விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்துப் பேசினார். முதலாவதாக, சவூதி அரேபியாவின் தலைமையின் கீழ், பெண்கள், இளையோர் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த வழிமுறையின் கீழ், வாய்ப்புகள் கிடைக்கச் செய்வதற்கான கொள்கைத் திட்டங்களை ஜி20 உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்களில், இளையோர், பெண்கள், முறைசாராப் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் வயது வந்தோரின் திறன்கள், நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜி20 உறுப்பு நாடுகளின் கொள்கைகள் தொடர்பான அனுபவங்கள் இடம் பெற்றுள்ளது.  மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களை அதிக அளவில் கொரோனா பெருந்தொற்று தாக்கும் நிலையில், இந்தத் திட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டாவதாக, சர்வதேச வரிவிதிப்புத் திட்டம் மற்றும் டிஜிட்டல் வரிவிதிப்பு முறை தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் குறித்து திரு.சீத்தாராமன் குறிப்பிட்டார். இதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஒருமித்த முடிவுகள் விரிவான பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில், எளிதான, உள்ளடக்கிய தீர்வுகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த அமர்வின் போது, பெருந்தொற்றை எதிர்கொள்ள இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு கொள்கை முடிவுகளை நிதியமைச்சர் பகிர்ந்து கொண்டார். அதாவது, நேரடி மானியப் பரிமாற்றங்கள், வேளாண்மை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைகளுக்கு சிறப்பு ஆதரவு, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, 42 கோடி மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரில் தொடர்பு கொள்ளாமலேயே 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையை பரிமாற்றம் செய்யும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தேசிய அளவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் கட்டமைப்பைப் பயன்படுத்தி தொழில் நுட்ப அடிப்படையிலான நிதி உள்ளடக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக இந்தியா எவ்வாறு அமல்படுத்தியது என்பதை எடுத்துரைத்தார். நவம்பர் 2020 வரையான 8 மாத காலத்துக்கு 80 கோடிக்கும் மேலான மக்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் அவர் குறிப்பிட்டார்.

****(Release ID: 1639750) Visitor Counter : 115