பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அமெரிக்கா - இந்தியாவின் கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணியின் அமைச்சர் அளவிலான இரண்டாவது கூட்டத்தின் முடிவில் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறைகளுக்கான அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஊடகங்களின் முன்பு ஆற்றிய உரை
Posted On:
17 JUL 2020 9:33PM by PIB Chennai
“அமெரிக்கா- இந்தியாவின் கேந்திரரீதியான எரிசக்திக்கான கூட்டணியின் அமைச்சர்கள் அளவில் இன்று நடைபெற்ற இரண்டாவது கூட்டத்திற்கு அமெரிக்காவின் எரிசக்தித் துறை அமைச்சரான திரு. டான் ப்ரூலெட்டும் நானும் தலைமை தாங்கினோம். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி தொடர்பான விஷயங்கள் பற்றியதாகவே எங்களது கலந்துரையாடல்கள் முழுவதும் இருந்தன.
இன்றைய சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்க எரிசக்தி அமைச்சரும் நானும் ஜூலை 15ஆம் தேதி அமெரிக்க - இந்தியா வர்த்தகக் கவுன்சில் (US-India Business Council - USIBC) ஏற்பாடு செய்திருந்த தொழில்துறை அளவிலான கலந்துரையாடலுக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினோம். ஜூலை 14 அன்று அமெரிக்க - இந்தியா கேந்திர ரீதியான எரிசக்திக் கூட்டணி (US-India Strategic Energy partnership - USISPF)) ஏற்பாடு செய்திருந்த தொழில்துறை அளவிலான சந்திப்பிற்கு நான் தனியாக தலைமை தாங்கினேன்.
அமைச்சர் ப்ரூலெட் மற்றும் நான் ஆகிய இருவரும், கேந்திர ரீதியான எரிசக்திக் கூட்டணி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆராய்ச்சிக்கான இந்தியா-அமெரிக்க கூட்டணி (India-US Partnership to Advance Clean Energy research - PACE) ஆகிய நான்கு தூண்களின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி அடைகிறோம்.
இருதரப்பு அளவிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வளர்ப்பதைத் தவிர, எரிசக்திப் பாதுகாப்போடு எரிசக்தி ஒத்துழைப்பை சீரமைக்கவும், அந்தந்த எரிசக்தித் துறைகளில் எரிசக்தி மற்றும் புதுமை இணைப்புகளை விரிவுபடுத்தவும், தொழில் மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இரு நாடுகளின் தனித்தன்மையோடு சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு உரிய வசதிகளைச் செய்து வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறுகிய காலத்திலேயே இருதரப்பு எரிசக்தி வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறித்தும் நாங்கள் திருப்தி அடைகிறோம். இருதரப்பு ஹைட்ரோகார்பன் வர்த்தகம் மட்டுமே 2019-20 ஆம் ஆண்டில் 9.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இருதரப்பு வர்த்தகத்தில் 10 சதவீதம் ஆகும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதையும் நாங்கள் காண்கிறோம். உண்மையில், இந்தியா இப்போது அமெரிக்க கச்சா எண்ணெய்க்கான நான்காவது பெரிய ஏற்றுமதி இடமாகவும், அமெரிக்க எல்.என்.ஜிக்கு (US LNG) 5 வது பெரிய இடமாகவும் உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்திய நிறுவனங்கள் இன்னும் நீண்ட கால ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தப் போக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேந்திரரீதியான பெட்ரோலிய கையிருப்புக்கான ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். இந்தியாவின் கேந்திரரீதியான எண்ணெய்க் கையிருப்பை அதிகரிக்க யு.எஸ். கேந்திர ரீதியான பெட்ரோலிய ரிசர்வ் கச்சா எண்ணெயை சேமிப்பதற்கான ஒரு முன்னேறிய கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.
யு.எஸ்-இந்தியா இயற்கை எரிவாயு பணிக்குழு மூலம், இந்தியா, அமெரிக்க தொழில் துறைகள் புதுமையான திட்டங்களில் புதிய வணிகக் கூட்டணிகளை உருவாக்கி, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் குறித்த இந்தியாவின் பார்வையை ஆதரிக்க தொடர்ச்சியான கொள்கை மற்றும் ஒழுங்குமுறைக்கான பரிந்துரைகளையும் உருவாக்கியுள்ளது. இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன் கீழ் உருவாக்கப்பட்டு செயல்படும் கட்டத்தை அவை எட்டியுள்ளன. இது குறித்த விவரங்கள் எமது கூட்டு அறிக்கையில் உள்ளன.
தெற்காசியாவின் எரிசக்திக்கான குழுமம் (South Asia Group for Energy - SAGE) மற்றும் ஒரு ஹைட்ரஜன் பணிக்குழு உள்ளிட்டு மறுசுழற்சிக்கான எரிசக்தித் துறையில் பல்வேறு முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நீண்ட கால எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தித் தரவு மேலாண்மையின் மூலம் திட்டங்கள் மற்றும் நீண்டகால உத்திகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் நிதிஆயோக் மற்றும் யுஎஸ்ஐஐடி (NITI Aayog and USAID) ஆகியவை இந்தியா எரிசக்தி முன்மாதிரி மன்றத்தைத் தொடங்கியுள்ளன. மேலும் குறைவாக கார்பன்களை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளன.
உயிரி எரிசக்தி, வேளாண்மை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மறுசுழற்சி, மேலும் சி.சி.யு.எஸ் மூலம் குறைந்த-பூஜ்ஜிய உமிழ்வுகளுடன் கூடிய உயர் திறன் கொண்ட நிலக்கரி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட புதிய பகுதிகளில் ஒத்துழைக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.
கேந்திரரீதியான எரிசக்திக்கான கூட்டணியின் நான்கு தூண்களின் ஊடாக அதன் குறுக்கு வெட்டு கருப்பொருளாக “எரிசக்தி துறையில் பெண்கள்” என்பதை சேர்க்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த கருப்பொருள் இந்தியாவின் மின்சார வசதிக்கான திட்டத்தில் பிரதிபலிக்கும் வகையில் எரிசக்தி நிர்வாக கட்டமைப்புகளில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும்.
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட கேந்திர ரீதியான எரிசக்தி கூட்டணி பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் ஒரு குறுகிய காலத்தில் உருப்பெற்றுள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்தியா-அமெரிக்க கேந்திர ரீதியான கூட்டணியைத் தாங்கிப் பிடிக்கும் வலுவான தூண்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
குறிப்பாக எரிசக்திக்கான உள்கட்டமைப்பின் வளர்ச்சியில், இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட சுயச்சார்பு மிக்க இந்தியா இயக்கத்தில் இணைந்து கொள்ள அமெரிக்க அரசையும் அமெரிக்க நிறுவனங்களையும் நான் அழைத்திருக்கிறேன்.
இந்தியாவில் சந்தை இருக்கிறதெனில், அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு, முதலீடுகளுக்கான சாத்தியங்கள் மற்றும் இவற்றோடு தொடர்புடைய முன்னேறிய தொழில்நுட்பங்கள் உள்ளன. நம் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, அனைவருக்கும் வெற்றி தருவதாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
இக்கூட்டம் தொடர்பான ஒரு கூட்டறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை எமது அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்படுவதோடு சமூக ஊடகங்களிலும் பதியப்படும்.
இந்திய – அமெரிக்காவிற்கு இடையிலான கேந்திர ரீதியான எரிசக்திக்கான கூட்டணியை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து உதவி செய்துவருவதற்காக அமெரிக்க அமைச்சர் திரு. ப்ரூலெட்டிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(Release ID: 1639690)