சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்ற சார்தாம் சாலைத் திட்டம் குறித்து திரு. கட்கரி தலைமையில் ஆய்வு.

Posted On: 17 JUL 2020 6:05PM by PIB Chennai

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சார்தாம் சாலைத் திட்டப் பணிகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று காணொளி மூலம் ஆய்வு செய்தார். மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்றத் துறை, தகவல், ஒலிபரப்புத் துறை, கனரகத் தொழில்கள் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், உத்தரகாண்ட் முதல்வர் திரு. திரிவேந்திர சிங் ராவத், மத்திய சாலைப் போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஓய்வுபெற்ற ஜெனரல் வி.கே. சிங், மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனம், பொதுப் பணித்துறை அமைச்சர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை மத்திய அரசு செயலாளர்கள், சாலைகள் துறை டைரக்டர் ஜெனரல், BRO டைரக்டர் ஜெனரல், இரு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு கண்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை கூடிய விரைவில் முடிக்குமாறு மத்திய அமைச்சர் திரு. கட்கரி கேட்டுக் கொண்டார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று கூறிய அவர், இதில் தொடர்புடைய அனைவரும் அந்த உயர்ந்த நோக்கத்தை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். மாநில அரசின் அளவில் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கைகள் எடுக்குமாறு முதலமைச்சரை திரு கட்கரி கேட்டுக் கொண்டார். குறிப்பாக சுற்றுச்சூழல் விஷயங்கள், நிலம் கையகப்படுத்துதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தீவிர கண்காணிப்பு இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வேண்டுமென்றே காலதாமதம் செய்வதைத் தடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஜவடேகர், உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை இத் திட்டத்தை அமல் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தத் திட்டங்களை முன்கூட்டியே முடிக்கும் வகையில், தங்கள் அமைச்சகம் மூலமான அனைத்து ஒத்துழைப்புகளும் அளிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உறுதியளித்தார்.

உத்தரகாண்ட் அரசு தயாரித்து, ஜல் சக்தி அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்ட பாகீரதி சுற்றுச்சூழல் மண்டலத்துக்கான மண்டல மாஸ்டர் திட்டத்துக்கு 2020 ஜூலை 16 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப் பட்டிருப்பதாகவும் திரு. ஜவடேகர் தெரிவித்தார்.



(Release ID: 1639443) Visitor Counter : 191