வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கோவிட்-19 பரவலையடுத்து நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் இருப்பு , விநியோகம் குறித்து திரு. பியூஷ் கோயல் ஆய்வு

Posted On: 17 JUL 2020 6:01PM by PIB Chennai

கோவிட்-19 பரவி வரும் சூழலில், நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் இருப்பை அதிகரித்தல் மற்றும் விநியோகம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று ஆய்வு மேற்கொண்டார். தற்போதைய நிலவரப்படி , நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் அதிக அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல்  மாதத்தில், நாளொன்றுக்கு  902 மெட்ரிக் டன்னாக இருந்த மருத்துவ ஆக்சிஜன் சராசரி  மாதாந்திர நுகர்வு  அளவு ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி, நாளொன்றுக்கு 1512 மெட்ரிக் டன்னாக அதிகிரித்துள்ளது. தற்போதை நிலவரப்படி, 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக போதிய கையிருப்பு உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ ஆக்சிஜனின் தற்போதைய உற்பத்தி மற்றும் விநியோக நிலை, இம்மாத இறுதி வாக்கில் தேவைப்படும் மொத்த அளவுடன் ஒப்பிடுகையில், நன்றாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பெருநகரங்கள் மற்றும் மாவட்டங்களில், விநியோகம் மற்றும் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இதே போல, தொலைதூரப் பகுதிகளிலும், இதன் தேவைக்கு ஏற்ப கையிருப்பு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் உள்பட, மருத்துவ ஆக்சிஜன் உதவியுடன் உள்ள மொத்த கோவிட்-19 நோயாளிகளின் விகிதம் நேற்று 4.58 சதவீதமாக குறைந்தது. மார்ச் 1-ஆம் தேதி  5938 மெட்ரிக் டன்னாக இருந்த மருத்துவ ஆக்சிஜன் இருப்புத் திறன் சுமார் 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அனைத்துப் பெரிய உருளைகள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கிரையோஜெனிக் வாகனங்கள் தற்போது அரசின் மின்னணு சந்தை  பொது கொள்முதல் தளத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் உற்பத்தியாளர்களும் பதிவுசெய்து வருகின்றனர்.

ஏதாவது அவசரத்தேவை ஏற்பட்டாலோ, பாதிப்பு திடீரென அதிகரித்தாலோ, போதிய அளவுக்கு மருத்துவ ஆக்சிஜன் இருப்பை வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்  வலியுறுத்தினார்மோசமான வானிலை காரணமாக, சாலைத் தொடர்புகள் பாதிக்கப்படும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தைத் தடையின்றி கிடைக்கச் செய்ய சிறப்பு கவனம் தேவை என அவர் உத்தரவிட்டார்.

 

****



(Release ID: 1639425) Visitor Counter : 191