நிதி அமைச்சகம்

பணம் எடுக்கும் போது பொருந்தக்கூடிய மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரி விகிதங்களைக் கணக்கிடும் வசதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியது

Posted On: 12 JUL 2020 8:21PM by PIB Chennai

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதவராக இருப்பின் ரூ 20 லட்சத்துக்கு மேலும், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்பவராக இருப்பின் ரூ 1 கோடிக்கு மேலும் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து பணம் எடுக்கும் போது, பொருந்தக்கூடிய ஆதாரத்தில் இருந்து கழிக்கப்படும் வரி விகிதங்களைக் கணக்கிடுவதற்காக புதிய செயல்முறை ஒன்றை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 53,000-க்கும் அதிகமான சரிபார்ப்பு கோரிக்கைகள் இந்த வசதியின் மூலம் இது வரை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன.

 

ஜூலை 1, 2020 முதல் www.incometaxindiaefiling.gov.in-இல் கிடைக்கும் "194-என் பிரிவின் கீழான பொருந்துதல் சரிபார்ப்பு" என்னும் இந்த செயல்முறை, வங்கிகளுக்கும் தற்போது கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த நடைமுறையும் தானியங்கியாகி வங்கியின் உட்புற மைய வங்கியியல் தீர்வுக்குள் இணைக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்தது.

 

இந்த வசதியின் விவரங்களைக் குறித்து விளக்கிய மத்திய நேரடி வரிகள் வாரியம், பொருந்தக்கூடிய ஆதாரத்தில் இருந்து கழிக்கப்படும் வரி விகிதங்களைக் கணக்கிட, பணத்தை எடுக்கும் நபரின் நிரந்தக் கணக்கு எண்ணை மட்டும் வங்கி/தபால் நிலையம் உள்ளீடு செய்தால் போதும் என்றது. நிரந்தக் கணக்கு எண்ணை உள்ளிட்டவுடன், துறை சார்ந்த வசதியில் உடனடியாக ஒரு தகவல் ஒளிரும்: "ரூ 1 கோடிக்கும் மேல் பணம் எடுத்தால் மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரி விகிதம் 2%" [பணம் எடுப்பவர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்பவராய் இருந்தால்] மற்றும் ரூ 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரி விகிதம் 2% மற்றும் ரூ 1 கோடிக்கு மேல் எடுத்தால் 5%" [பணம் எடுப்பவர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதவராய் இருந்தால்].

 

வரி கணக்கைத் தாக்கல் செய்யாத நபர்கள் அதிக அளவில் பணத்தை எடுப்பதாக தகவல்கள் தெரிவித்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியது. இந்த நபர்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதை உறுதி செய்யவும், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதவர்களின் பணம் எடுத்தலைக் கண்காணிக்கவும் மற்றும் கருப்புப் பணத்தை முடக்கவும், கணக்கைத் தாக்கல் செய்யாத நபர்களின் பணம் எடுத்தல் அளவை ரூ 20 லட்சமாக குறைத்தும், கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் ரூ 1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் அதிக பட்ச வரி விகிதமான 5 சதவீதத்தை விதிக்கவும் 1 ஜூலை, 2020 முதல் வருமான வரி சட்டத்தில் மேலும் திருத்தங்களை நிதி சட்டம், 2020 செய்தது.

 


(Release ID: 1638265) Visitor Counter : 326