வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஃபிரேம்ஸ் மாநாட்டின் நிறைவு விழாவில் திரு.பியூஷ் கோயல் உரை.

Posted On: 11 JUL 2020 7:03PM by PIB Chennai

இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) நடத்திய FICCI Frames என்ற மாநாட்டில் இன்று நடைபெற்ற நிறைவு அமர்வில் மத்தியத் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார். சர்வதேச அளவில் செயல்படுவதற்கு இந்தியத் திரைப்பட மற்றும் விளம்பரத் துறையினரிடம் தகுதியும், திறனும் இருப்பதாக அமைச்சர் கூறினார். அவர்களால் தரமான படைப்புகளைக் கொண்டு வருவது, விருதுகளை வெல்வது, இந்தத் துறைக்கு அதிக முதலீடுகளைக் கொண்டு வருவது ஆகியவற்றை நிறைவேற்ற முடியும். திரைப்படத் துறை, தேசிய எல்லைகளைத் தாண்டி வளர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு பல்வேறு அனுமதிகளையும் ஒற்றைச்சாளர முறையில் வழங்குவது, செயல்பாடுகளை எளிமைப்படுத்துவது, ஆன்லைன் முறையில் அனுமதி வழங்குவது, மின் ஆளுமையை செயல்படுத்துவது ஆகியவை திரைப்படத் துறையினரின் நியாயமான கோரிக்கைகள் என்றும், இதனை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் திரு.கோயல் தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகப் போரிடுவதில் இந்திய சினிமாத் துறை அளித்து வரும் பங்களிப்புக்கு திரு.கோயல் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், சமூகத்துக்கு உகந்த கருத்துருக்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் பாராட்டினார். நாட்டில் உள்ள 135 கோடி மக்களும் பொழுது போக்கு மீது மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ப திரைப்படத் துறை எப்போதும் வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், அச்ச உணர்வு மேலும் அதிகரித்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார். அப்போது அவர், “உலகின் புதிய நிலைத்தன்மையுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டும். புதியவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவிட் பெருந்தொற்றால், திரைப்படத்துறையும், பொழுதுபோக்குத் துறையும், மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் செயல்பாடுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யூகிக்க வேண்டியது அதிமுக்கியமானது,” என்றார். பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு மீண்டு வருகிறது, அதே போல, பொழுதுபோக்குத் துறையும் விரைவில் புத்துயிர் பெறும் என்று அமைச்சர் கூறினார்.

ஒழுங்குபடுத்தப்படாத OTT தளங்கள் குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். அதாவது, இதில் வெளிப்படும் கருத்துக்கள் சில நேரங்களில் கண்டிக்கத்தக்கதாகவும், தவறான தகவல்களை உள்ளடக்கியதாகவும், நமது தேசத்தையும், சமூகத்தையும் தவறாக வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. இவை குடும்பத்தினருடன் இணைந்து பார்ப்பதற்குத் தகுதி இல்லாததாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திரைப்படத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 லட்சம் பேர் பணியாற்றி வருவதாக திரு.கோயல் குறிப்பிட்டார். அனைத்து தரப்பினர் மீதும் திரைத்துறை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களின் நலன்காக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதன் மூலமே, இந்தத் துறையுடன் தொடர்புடைய அனைவரும் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ முடியும் என்று திரு.கோயல் கூறினார்.

=========================


(Release ID: 1638196) Visitor Counter : 228