பாதுகாப்பு அமைச்சகம்
“சமுத்திர சேது” நடவடிக்கையை இந்திய கப்பல்படை நிறைவு செய்தது
Posted On:
08 JUL 2020 6:33PM by PIB Chennai
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்திய குடிமக்களை திரும்ப நாட்டுக்கு அழைத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 5 மே 2020ல் தொடங்கப்பட்ட சமுத்திர சேது நடவடிக்கையானது, கப்பல் பயணத்தின் மூலம் வெற்றிகரமாக 3,992 இந்திய குடிமக்களை தாயகத்திற்கு மீண்டும் அழைத்து வந்த பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜலஷ்வா (லேண்டிங் பிளாட்ஃபார்ம் டோக்) மற்றும் அய்ராவத், ஷர்துல் மற்றும் மகர் (லேண்டிங் ஷிப் டேங்க்ஸ்) ஆகிய இந்திய கப்பல்படையின் கப்பல்கள் இந்த நடவடிக்கையில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டு கடலில் 23,000 கி.மீட்டருக்கு மேல் பயணித்துள்ளன. இதே போன்ற, குடிமக்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கைகளை இந்தியக் கப்பல்படை 2006ல் ஆபரேஷன் சுக்கூன் (பெய்ரூட்) மற்றும் 2015ல் ஆபரேஷன் ரகத் (ஏமன்) ஆகியவற்றின் போது மேற்கொண்டு இருந்தது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலானது, கப்பல்களில் சில மாற்றங்கள் செய்வதையும் மாலுமிகள் விதிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது. பயணிகளுக்கு ஏற்ற சூழ்நிலை மற்றும் காற்றோட்ட வசதிகள் கட்டாயமாக கப்பல்களில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்திலும் சிரமமான நெருக்கடிக்கு இடையிலும் இந்திய கப்பல்படையானது வெளிநாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்ள முடியாமல் சிக்கித் தவித்த குடிமக்களை திரும்ப அழைத்து வரும் சவாலான பணியில் ஈடுபட்டது. இவ்வாறு குடிமக்களைத் திரும்ப அழைத்து வரும் போது கப்பல் பயணத்திலேயே கப்பலுக்குள் நோய்த்தொற்று திடீரென பரவிவிடக் கூடிய சூழலை தவிர்ப்பதுதான் இந்திய கப்பல்படைக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. தீவிரமான முன்தடுப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. கப்பல்களை இயக்குவதற்கான சூழ்நிலைக்கென்று பிரத்யேகமாக வகுக்கப்பட்ட மருத்துவ / பாதுகாப்பு செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டன. இந்த நடைமுறைகள் அனைத்தும் சமுத்திர சேது ஆபரேஷனின் போது கப்பல்களில் முழுமையாகக் கடைபிடிக்கப்பட்டதால் 3992 இந்திய குடிமக்கள் தமது தாயகத்திற்கு பாதுகாப்பாகத் திரும்ப முடிந்தது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் மற்றும் மருத்துவ ஏற்பாடுகள், அதன் விளைவாக ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை நிர்ணயித்தல் போன்ற செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கக்கூடிய இந்தியக் கப்பல்படையின் கப்பல்கள் சமுத்திர சேது ஆபரேஷனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் பிரத்யேகமான வசதிகள் செய்யப்பட்டன. நோயாளி பகுதி அல்லது கப்பலில் கிளினிக் என்ற பகுதியில் கோவிட்-19 தொடர்பான உபகரணங்களும், வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பெண் பயணிகளுக்கு உதவும் வகையில் பெண் அதிகாரிகளும், இராணுவ செவிலியர் ஊழியர்களும் கப்பலில் பயணம் செய்தனர். இந்தக் கப்பல்களில் கடல் பயணத்தின் போது திரும்ப அழைத்து வரப்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை வசதிகளும் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டன. ஜலஷ்வா கப்பலில் அழைத்து வரப்பட்ட திருமதி சோனியா ஜேக்கப் பிரசவ நேரத்தில் இருந்ததால் கொச்சியை அடைந்த சில மணி நேரங்களிலேயே ஆண் குழந்தையை, சர்வதேச தாய்மார்கள் தினத்தில் பெற்றெடுத்தார்.
சமுத்திர சேது ஆபரேஷனின் போது ஜலஷ்வா, அய்ராவத், ஷர்துல் மற்றும் மகர் ஆகிய இந்தியக் கப்பல்படையின் கப்பல்கள் 23,000 கி.மீட்டருக்கு மேல் பயணித்து உள்ளன. குடிமக்களை திரும்ப அழைத்து வரும் செயல்பாட்டில் இவை ஒருங்கிணைந்த முறையிலும் பிரச்சனை ஏதும் இல்லாத முறையிலும் செயல்பட்டன.
********
(Release ID: 1637523)
Visitor Counter : 287