மத்திய அமைச்சரவை

நகர்ப்புற ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

Posted On: 08 JUL 2020 4:27PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் – நகர்ப்புறம் திட்டத்தின் கீழ் ஒரு துணைத் திட்டமாக நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கென மலிவான வாடகை வீட்டு வளாகங்களை கீழ்கண்ட வகையில் உருவாக்குவதற்கான தனது ஒப்புதலை வழங்கியது:

  1. தற்போது காலியாகவுள்ள அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டு வளாகங்கள் 25 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தங்களின் மூலம் மலிவு வாடகை வீட்டு வளாகங்களாக மாற்றப்படும். இந்த குத்தகையைப் பெற்றவர்கள் அந்த வீட்டு வளாகங்களில் தற்போதுள்ள குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, சுகாதார வசதி, சாலை வசதி போன்ற கட்டமைப்புகளில் நிலவும் இடைவெளிகளைச் சரிசெய்து போதிய பழுதுபார்த்தல்/ மாற்றல் ஆகியவற்றின் மூலம் வசிக்கக்கூடிய பகுதிகளாக அவற்றை மாற்றி, அந்தக் குடியிருப்புகளை குத்தகை காலப்பகுதியில் பராமரித்து வரவேண்டும். வெளிப்படையான ஏல முறையின் மூலம் இந்தக் குத்தகைதாரர்களை மாநில அரசுகளும், துணை மாநில அரசுகளும் தேர்ந்தெடுக்கும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வளாகங்கள் மீண்டும் இதே போன்ற குத்தகை முறையில் அடுத்த சுற்றில் செயல்படவோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் நேரடி மேற்பார்வையில் செயல்படவோ செய்யும்.
  2. தங்களிடம் உள்ள காலி நிலத்தில் இதே போன்ற மலிவு வாடகையிலான வீட்டு வளாகங்களை தாங்களாகவே கட்டி முடித்து 25 ஆண்டுகளுக்குப் பராமரிக்க முன்வரும் தனியார்/பொது அமைப்புகளுக்கு நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, 50 சதவீதம் கூடுதலான கட்டுமான அனுமதி, முன்னுரிமைத் துறையில் வழங்கப்படும் வட்டி விகித அடிப்படையில் சலுகைக் கடன், மலிவான வீட்டு வசதித் திட்டங்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான  வரிச் சலுகை ஆகியவை வழங்கப்படும்.

உற்பத்தித் தொழில்கள், விருந்தோம்பல், மருத்துவம், உள்நாட்டு/ வணிக நிறுவனங்கள், கட்டுமானம் அல்லது இதர துறைகள் ஆகியவற்றில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள், மாணவர்கள், கிராமப்புறப் பகுதிகளில் இருந்தும் அல்லது சிறு நகரங்களில் இருந்தும் நல்ல வாழ்க்கையைத் தேடி நகர்ப்புறத்திற்கு வருவோர் ஆகியோர் இந்த மலிவு வாடகை வீட்டு வசதி வளாகங்களால் பயன்பெறுவோராக இருப்பர்.

இவற்றின் கட்டுமானத்தில் பயன்படுத்தும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிவதற்கென தொழில்நுட்பப் புதுமையாக்கத்திற்கான நிதியுதவி வடிவத்தில் இத்திட்டங்களுக்கு நிதி வழங்க ரூ. 600 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்கத்தில் மலிவு வாடகை வீட்டு வளாகங்களின் கீழ் சுமார் 3 லட்சம் பேர் பயனடைவார்கள்.

பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே மலிவு விலையில் வாடகை வீட்டு வசதி நகர்ப்புறங்களில் கிடைப்பதற்கான புதியதொரு சூழலை இந்த மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் உருவாக்கும். இந்தத்  திட்டங்களின் கீழ் செய்யப்படும் முதலீடுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த வீட்டு வளாகங்கள் தேவையற்ற பயணம், மக்கள் நெருக்கடி, மாசு ஆகியவற்றைக் குறைக்கவும் உதவும்.

அரசு நிதியின் கீழ் உருவாக்கப்பட்டு காலியாக உள்ள வீட்டு வசதி வளாகங்களும் பொருளாதார ரீதியாக அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மலிவு வாடகை வீட்டு வளாகங்களாக மாற்றி அமைக்கப்படும். இத்திட்டமானது காலியாக உள்ள தங்களது சொந்த இடத்திலும்  இது போன்ற மலிவு வாடகை வீட்டு வளாகங்களை உருவாக்க தனிநபர்களுக்கு உற்ற சூழலை ஏற்படுத்துவதோடு வாடகை வீட்டுத் துறையில் புதிய தொழில்முனைவர்களை வளர்த்தெடுக்கவும் உதவி செய்யும்.

*******



(Release ID: 1637480) Visitor Counter : 294