சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 அண்மைத் தகவல்கள்

Posted On: 07 JUL 2020 6:53PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகள் ”பரிசோதனை, தொடர்பாளர் தடம் அறிதல் மற்றும் சிகிச்சை” என்ற உத்தியைக் கடைபிடித்து வருகின்றனர்.

இந்தியாவில், கோவிட்-19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் தொற்றுள்ள பாசிட்டிவ் நபர்களுக்கு திறம்பட மருத்துவமனை சிகிச்சை அளித்தல் ஆகிய செயல்பாடுகளில் தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.  10 லட்சம் நபர்களுக்கு எத்தனை தொற்றுள்ள நபர்கள் உள்ளனர் என்ற விகிதத்தை விட 10 லட்சம் நபர்களுக்கு எத்தனை நபர்கள் குணமானார்கள் என்ற விகிதத்தை அதிக அளவில் பராமரிப்பதை உறுதிசெய்யும் அளவில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  மொத்த தொற்றுள்ள பாசிட்டிவ் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட குணமானவர்களின் எண்ணிக்கையானது வேகமாக அதிகரித்து வருவதால் தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது.  இந்த நிலைமையானது கோவிட் மருத்துவமனைகளில் நெருக்கடி இல்லை என்பதையும் அவை விரிவுபடுத்தப்படவில்லை என்பதையும் உறுதிபடுத்துகிறது.

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் நபர்களுக்கு 315.8ஆக இருக்கிறது.  அதே சமயம் நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் நபர்களுக்கு 186.3 என்ற குறைந்த அளவில் உள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவுறுத்தலை பின் தொடர்ந்து மாநிலங்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகள் ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளனஇது தொற்றுள்ளவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவுகிறது  மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்ததன் காரணமாக தொற்றுள்ள பாசிட்டிவ் நபர்களை பிரத்யேக கோவிட் மருத்துவமனை, கோவிட் சுகாதாரப் பராமரிப்பு மையம் மற்றும் கோவிட் பராமரிப்பு மையம் உள்ளிட்ட பலவகையான சுகாதாரப் பராமரிப்பு இடங்களில் பரவலாகத் தங்க வைக்க முடிந்துள்ளது.

பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தொடர்பாளர் தடம் அறிதல் மற்றும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் குறிப்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  தொற்றுள்ள புதிய பாசிட்டிவ் நபர்களின் தொடர்பாளர்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் தொடர்புகளையாவது கண்டறிய வேண்டுமென்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டாக வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  முதியவர்கள், ஏற்கனவே நோய் உள்ள நபர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட தொற்று ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளவர்களை தடம் அறிவதற்காக மாநிலங்கள் பல்வேறு வகையான மொபைல் செயலிகளை உருவாக்கியுள்ளன.  பொதுமக்களின் ஈடுபாடு, உள்ளூர் அரசாங்க நிலையில் ஆஷா பணியாளர்கள் மற்றும் ஏஎன்எம்-களின் இடையறாத பணி ஆகியன சமுதாய நிலையில் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ள உதவுகின்றன.   



(Release ID: 1637083) Visitor Counter : 261